ஒருங்கிணைந்த பண்ணையில் மாதம் ₹ 1 லட்சம் லாபம்! வீட்டையே மீன் பண்ணையாக மாற்றிய பெண் விவசாயி!!
தற்காலத்தில் பலரும் மாடியில் மாடித்தோட்டம் அமைத்து அவரவர் குடும்பத்துக்கான காய்கறி தேவைகளை பூர்த்தி செய்துவருகின்றனர். அதை பார்க்கும் பலர் சூப்பரா இருக்கே என வியப்பதுண்டு. ஒரு சிலர் என்ன காரியம் செய்திருக்கீங்க. இப்படி தண்ணீர் கசிந்தால் வீட்டின் கட்டுமானம் பாதிக்குமே என்று அச்சமூட்டுவர். இப்படிபட்டவர்கள் மத்தியில் நம் கதை நாயகி செய்திருப்பதை பார்த்தால் அசந்துபோவீர்கள்.
ஒருங்கிணந்த பண்ணையம் அமைக்க தன் சொந்த வீட்டையே குளத்துக்குள் கட்டியுள்ளார். மேலே வீடு, அதன் கீழ் ஆடு, கோழி, வாத்துகளுக்கான கொட்டில், அதற்கும் கீழே குளம், குளத்துக்குள் மீன், குளத்தின் மேற்பரப்பில் அசோலா வளர்ப்பு என அசத்துகிறார். தில்லாக குளத்துக்குள் 15 அடிக்கு பில்லர் அமைத்து தன் வீட்டை கட்டியுள்ளார். தேவைப்பட்டால் இதன்மீது மேலும் 8 தளம் அமைக்கலாம். அந்தளவு உறுதியுடன் பில்லர்களை கட்டியிருக்கிறேன் என்கிறார் இந்த ‘தில்’ லட்சுமி.
திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் பெட்டவாய்த்தலை, கீழஆரியம்பட்டி லட்சுமியின் வீட்டைச் பார்த்த போது ஆச்சரியம் ஏற்பட்டது. குளத்துக்குள் பில்லரில் அமைந்திருந்த வீடு, குளத்துக்கரை மற்றும் வீட்டை சுற்றி தென்னை, மா, கொய்யா, நெல்லி என பல்வேறு பயன் தரும் மரங்கள். குளத்தில் மிதக்கும் பச்சை வண்ண அசோலா, ஒருபுறமாக கட்டிக்கிடக்கும், ஆடுகள், மாடுகள், குளக்கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த கோழிகள், தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த வாத்துக்கள், சில்லென்ற காற்றுடன் ரம்மியான சூழலாக இருந்தது. வாசலுக்கு வந்த லட்சுமி கிராமத்துக்கே உரிய பண்பாடோடு தண்ணீர் கொடுத்து நம்மை வரவேற்றார்.
அவர் கூறுகையில்,‘‘ சிறு வயது முதலே எனக்கு ஆடு, மாடு, கோழி, வாத்து உட்பட வீட்டில் வளர்க்கும் அனைத்து மீதும் அலாதி பிரியம். அப்படி முதலில் ஆசைக்காக வளர்க்கத் துவங்கியது, பின்னர் அவை தரும் பால், தயிர், மோர், முட்டை என விற்பனை செய்யத் துவங்கியதும், அதுதான் என் தொழிலாக இருக்கும் என்பதை உணர்த்தியது.
ஒரே இடத்தில் பல வகையான கால்நடைகளை வளர்ப்பது பலமடங்கு லாபம் கிடைக்கும் என்பது தெரிந்தது. இதனால் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் ஆசை வந்தது. ஆனால் அதற்கு அதிகளவு இடம் தேவைப்பட்டது. என்னிடம் இருந்ததோ ஒரு ஏக்கர் நிலம் தான்.
என் கணவர் மற்றும் பிள்ளைகள் எனக்கு மிக உதவிகரமாக இருந்தனர். கணவர் பொறியாளர். சொந்தமாக தொழில் செய்து வருகிறார். ஒரு மகள் கல்லுாரி முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். மகன் பிளஸ் 2 படித்து வருகிறார். 4 பேரும் சேர்ந்து தீர ஆலோசித்து பிறகு கட்டியதுதான் இந்த வீடு. ஒரு ஏக்கரில் 35 செண்டில் குளத்தை வெட்டினோம். அதில் ஒதுக்குப்புறமாக ஐந்து செண்டில் பில்லர் அமைத்து அதன் மீது எங்களுக்கான வீட்டை கட்டினோம்.
கீழ்த் தளத்தில் ஆடு, கோழி, வாத்துக்குரிய பரண், அதற்கும் கீழ் குளம், குளத்தில் மீன், குளத்தின் மேல் அசோலா சாகுபடி என பக்காவாக திட்டமிட்டு செயல்பாட்டை துவங்கினோம். வாத்து, கோழி, ஆடுகளுக்கு பரண் அமைக்க பணம் தேவைப்பட்டது. சிறுகமணி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆடு,கோழிகளுக்கு கொட்டில் அமைக்க லோன் தருவதாக அறிந்து முதன் முதலாக அங்கு சென்றேன்.
ஆனால் இன்று அங்கு நான் எஸ்ஏசி-ல்(scientific advaisary committie) மெம்பராக உள்ளேன். அங்கிருந்த அதிகாரிகளிடம் என் வீட்டு போட்டோவை காட்டி லோன் கேட்டதும், அனைவரும் அசந்து போயினர். மறுநாளே என் வீட்டுக்கு ஒரு பெரும் படையுடன் வந்தனர். நீண்ட நாட்களாக எங்கள் யோசனையில் இருந்த ஒரு வீட்டை நீங்கள் கட்டியுள்ளீர்கள் என, எங்கள் முயற்சியை பெரிதும் பாராட்டினர்.
அதோடு எனக்கு லோனுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். துவக்கத்தில் 500க்கும் மேற்பட்ட கோழிகளுடன் கோழிகள் வளர்க்கத் துவங்கினேன். ஒரு நாளைக்கு 300 முட்டை வரை எடுப்பேன், வாத்துக்களும் முட்டையிடும். ஒரு கோழி முட்டை ₹15க்கும், வாத்து முட்டை ₹8 என விற்பேன். 4 மாடுகள் கறவையில் இருந்தன. பாலை நானே கறந்துவிடுவேன். ஆடு, கோழிகளின் கழிவுகள் மீனுக்கு உணவாகும். வாரம் ஒரு முறை மீன் பிடித்து நேரடியாக விற்பனை செய்துவிடுவேன்.
வீட்டைச் சுற்றி இருக்கும் மரங்களில் இருந்து கிடைக்கும் தேங்காய், மா, கொய்யா, நெல்லி என அனைத்தையும் பறித்து கூடையில் எடுத்துக்கொண்டு ஒரு ரவுண்ட் வந்தால் அனைத்தையும் விற்று விடுவேன். மாதம் இரண்டுக்கும் மேற்பட்ட ஆடு விற்பேன். வீட்டுக்கு பக்கத்தில் 6 ஏக்கர் நிலம் ஒத்திக்கு பிடித்து அவற்றில் நெல் ஒரு போகம் சாகுபடி செய்வேன்.
அடுத்து நஞ்சைத் தரிசில் உளுந்து, பயறு சாகுபடி செய்வேன். இதுவரை அட்சயா பொன்னி என்ற நெல்லை சாகுபடி செய்து வந்தேன். இந்த ஆண்டுதான் பாரம்பரிய நெல் ரகமான மாப்பிள்ளைச் சம்பா நடவு செய்தேன்.
நல்ல மகசூல் கிடைத்துள்ளது. நெல் நடவுக்கு ஆடு, மாடுகளின் சாணம் தவிர வேறு எதுவும் உரம் கிடையாது. பூச்சித் தாக்குதல்களுக்கு இயற்கை பூச்சி விரட்டிகள் மட்டுமே. இதனால் நெல் சாகுபடியில் எனக்கு பெரிய அளவில் இடுபொருள் செலவு ஆகாது.
அதே போன்று ஆடு, மாடு, கோழிகள், மீன் என எதற்கும் பணம் செலவு செய்து தீவனம் வாங்க மாட்டேன். அவற்றுக்கு ஏற்படும் நோய்களுக்கும் மூலிகைகளைக் கொண்டு நானே வைத்தியம் பார்த்து விடுவேன். ஆடு, மாடு, கோழிகளின் கழிவு மீனுக்கு உணவாகும். கோழி, வாத்துக்கள் வீட்டையும், குளத்தையும் சுற்றி மேய்ந்துவிடும்.
ஆடு. மாடுகளுக்கு தனியாக தீவனம் பயிரிட்டுள்ளேன். அதுமட்டுமின்றி நெல் அரைவையில் கிடைக்கும் தவிடு, குருணை இவற்றை ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்திக் கொள்வேன். இவ்வாறு ஒன்றில் இருந்து கிடைப்பதை மற்றொன்றுக்கு பயன்படுத்திக் கொள்வதால் பெரிய அளவில் பராமரிப்பு செலவு ஏற்படாது.
நான் உற்பத்தி செய்யும் பொருட்களை நானே நேரடியாக விற்பனை செய்வதால் லாபம் அதிகம் கிடைக்கும். சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் எஸ்ஏசி மெம்பராக இருப்பதால் அடிக்கடி அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், கண்காட்சிகளில் அரிசி, உளுந்து, பயறு, வெண்ணெய், நெய் உள்ளிட்ட என் உற்பத்திகளை விற்பனை செய்வேன்.
பொருள் தரமாக அங்ககப் பொருட்களாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் தேடி வந்தனர். அதே போன்று சாகுபடி செய்த நெல்லை அரைத்து அரிசியாக்கி அரை மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகளாக விற்கத் துவங்கினேன். அவை வாங்கியவர்களுக்கு பிடித்ததால், மொத்தமாக கேட்கத் துங்கினர். இதனால் நெல் முழுவதையும் அரைத்து 25 கிலோ சிப்பங்களாக வீட்டில் அடுக்கி வைத்துக்கொண்டு விற்றுவிடுவேன்.
சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்துக்கு வந்த துார்தர்ஷன் டிவி-யை சேர்ந்தவர்களுக்கு என்னைப் பற்றி தெரிய வந்தது. என் வீட்டிற்கு வந்து அனைத்தையும் படம் எடுத்தனர். அதோடு டெல்லியில் நடந்த ‘மகிளா கிஷான் புரஸ்கார்’ அவார்டுக்கு என்னை சிபாரிசு செய்தனர். அதில் தேர்வாகி டெல்லிக்கு சென்றேன்.
அங்கு விவசாயம் தொடர்பாக குறிப்பாக ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தேன். நெல் சாகுபடி தவிர்த்து கால்நடைகள் வாயிலாக மட்டுமே மாதத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிப்பேன் என நான் கூறியதை கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். எனக்கு விருதும் கிடைத்தது. டெல்லி சென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்ததை தமிழ்நாட்டுப் பெண்களுக்கே விருது கிடைத்ததாய் உணர்கிறேன்,’’ என்றார்.
மேலும் படிக்க....
தரமான வருமானம் தர்பூசணியிலே ! ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் லாபம்!!
உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள் அமைத்தல் தொடர்பான விதிமுறைகள் என்ன?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...