நெல் சாகுபடி – இயந்திரமயமாக்குதல் பல்வேறு நெல் நாற்று நடும் இயந்திரங்கள் அறிமுகம்!!


தானியங்களின் அரசியான அரிசியை உலக மக்கள்தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் அடிப்படை உணவாக உட்கொள்கின்றனா். இந்தியாவில் நெற்பயிரானது 44 மில்லியன் எக்டர்பரப்பளவில் பயிரிடப்பட்டு 104 மில்லியன் டன் என்ற அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல்லின் தேவை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 


இதன் தேவை 2025ம் ஆண்டில் 140 மில்லியன் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. சீனா தேசம் நெல் உற்பத்தியில் முதலிடமும் இந்தியா இரண்டாமிடமும் வகிக்கின்றன. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையும் மண்ணின் தன்மையும் நெல் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளன. தமிழ்நாட்டில் 18.5 இலட்சம் எக்டரில் நெற்பயிர் பயிரிடப்பட்டு ஆண்டொன்றுக்கு சுமார் 72 இலட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. 



சராசரியாக எக்டருக்கு 3.4 டன் உற்பத்தி என்ற அளவில் பல்வேறு பருவங்களில் (சொர்ணவாரி, கார், குறுவை, முன்சம்பா, தாளடி, பிசானம், பின்தாளடி, பிந்திய பிசானம் மற்றும் நவரை) பயிர் செய்யப்படுகின்றன.


விவசாயத்தில் கூலியாட்கள் தேவை அதிகரித்து வருவதோடு அவா்களுக்கு ஊதிய செலவும் அதிகரித்து வருகிறது. அதேவேளை, அவா்களின் செயல் திறன் குறைந்து கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நமது நாட்டின் மக்கள் தொகையினைக் கருத்தில் கொண்டு உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய சூழல்நிலையில், நெல் சாகுபடியை முழுமையாக இயந்திரமயமாக்குவது அவசியமான ஒன்றாகும். 


செம்மை நெல் சாகுபடி முறை பிரபலமாகி வரும் இச்சூழ்நிலையில் ஏற்கனவே தமிழக நெல் வயல்களில் ஒன்றுபட்ட கூட்டு அறுவடை இயந்திரங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே அறுவடை மிக எளிதாகவும் விரைவாகவும் முடித்துவிடக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. ஆதே போல் நெல் நாற்று நடுவதற்கும் பல்வேறு நெல் நாற்று நடும் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பரவலாக உபயோகத்தில் உள்ளன. நெற்பயிருக்கு ஏற்ற புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


லேசர் ஒளிக்கற்றை மூலம் நிலத்தை சமப்படுத்தும் கருவி


சிறப்பான நீர் பாசனத்திற்கு நிலத்தை சமப்படுத்துவது மிகவும் அவசியம். ஒரு இடத்தில் நீர் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் விளைச்சல் பாதிக்கப்படும். நிலம் சமமாக இருந்தால் 60 சதவீதம் நீர் சேமிக்கப்படுவதோடு விளைச்சலும் அதிகமாகக் கிடைக்கும். இந்த லேசர் ஒளிக்கற்றை மூலம் இயங்கக்கூடிய சமப்படுத்தும் கருவியைக் கொண்டு நாளொன்றுக்கு 2.0 எக்டர் நிலத்தை துல்லியமாக சமப்படுத்த முடியும். இதன் விலை ரூ.4,00,000/- ஆகும்.


லேசர் மூலம் சேற்றுழவு சமன் செய்யும் இயந்திரம்


இந்த கருவி லேசர் கடத்தி, லேசர் கிரகிக்கும் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு பெட்டி மூலம் இயங்குகிறது. சேற்றுழவு இயந்திரம் வெளிப்புற ஹைட்ராலிக் மூலம் லேசர் சமன் செய்யும் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது லேசர் ஒளிக்கற்றை உதவியுடன் சேற்று வயலில் மேலும் கீழும் ஏறி இறங்குவதன் மூலம் சேற்று வயலைத் துல்லியமாக சமன் செய்கிறது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட சேற்றுழவு மூலம் அடிமண் இறுக்கம் சீராக பராமரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 0.4 எக்டர் நிலத்தை சமப்படுத்தலாம். இந்த இயந்திரத்தின் விலை ரூ.4,50,000/- ஆகும்.



நன்செய் நிலங்களில் நேரடி நெல் விதைக்கும் கருவி


நெல் நாற்று நடுவதற்கு பதிலாக முளை கட்டிய நெல் விதைகளை சேற்று வயல்களில் நேரடியாக விதைக்கும் கருவி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவியில் நான்கு உருளை வடிவ விதைப்பெட்டிகள் உள்ளன. இந்த விதைப்பெட்டிகளில் 15 செ.மீ இடைவெளியில் 2 வரிசைகளில் துளைகள் போடப்பட்டுள்ளன. இக்கருவியை ஒருவர் இழுத்துச்செல்ல கைப்பிடி ஒன்றும் உள்ளது. இக்கருவியைக் கொண்டு நாளொன்றுக்கு 1.0 எக்டர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்யலாம். நாற்று நடவு தவிர்க்கப்படுவதால் ஆள் கூலி பெருமளவில் குறைகிறது. வரிசைகளில் களை எடுப்பது எளிது. இக்கருவியின் விலை ரூ.5000/- ஆகும்.


நெல் தட்டு நாற்றங்கால் தயாரிக்கும் இயந்திரம்


நெல் நாற்று தயாரிக்கும் இயந்திரம் நெல் நடவு இயந்திரத்திற்கு ஏற்றவாறு நெல் நாற்றுகளை தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த தானியங்கி இயந்திரத்தின் ஒரு முனையில் காலி பிளாஸ்டிக் தட்டுகளை செலுத்தினால் இயந்திரமே காலி தட்டில் மண்ணை நிரப்பி அதனை சமன் செய்து தேவையான அளவு நீரை ஊற்றி அதன் மேல் முளைகட்டிய நெல் விதைகளை சீரான இடைவெளியில் பரப்பி பின்பு அதன்மேல் மண்ணை நரப்பி விடுகிறது. ஒரு மணி நேரத்தில் 400 முதல் 600 தட்டுகள் வரை இந்த இயந்திரத்தைக் கொண்டு தயாரிக்கலாம். இக்கருவியின் விலை ரூ.2,00,000/- ஆகும்.


பின்னால் நடந்து செல்லும் வகை நடவு இயந்திரம்


இந்த இயந்திரத்தை ஓட்டுபவர் இயந்திரத்தின் பின்னால் நடந்து செல்லும் வகையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இது டீசல் என்ஜினால் இயங்கக் கூடியது. இந்த நடவு இயந்திரத்தில் நடவு செய்வதற்கு பாய் நாற்றங்கால் முறையில் அல்லது பிளாஸ்டிக் தட்டுகளில் வளர்க்கப்பட்ட நாற்றுகளை பயன்படுத்த வேண்டும். இந்த இயந்திரத்தில் ஒரே நேரத்தில் நான்கு வரிசைகளில் நடுவதற்கு ஏற்றவாறு நடவு ஏந்திகள் மற்றும் விரல் வடிவ நாற்று நடும் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தைக் கொண்டு நாளொன்றுக்கு 1.0 எக்டர் வரை நடவு செய்யலாம். இந்த இயந்திரத்தின் விலை ரூ. 2,50,000/- ஆகும்.



மேல் அமர்ந்து இயக்கிச் செல்லும் வகை நடவு இயந்திரம்


இந்த இயந்திரம் ஆறு வரிசை மற்றும் எட்டு வரிசை என இரண்டு விதங்களில் கிடைக்கிறது. இந்நடவு செய்யும் இயந்திரத்தில் முன்னோக்கி செல்வதற்கு இரண்டு கியரும் பின்னோக்கி செல்ல ஒரு கியரும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வளைவுகளில் சுலபமாக திருப்ப பவர் ஸ்டியரிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. நான்கு சக்கரங்களுக்கும் சக்தி செல்வதால் அனைத்து வகையான சேற்று வயலுக்கும் ஏற்றது. இந்த இயந்திரத்தைக் கொண்டு இரு வரிசைகளுக்கான இடைவெளியை 30 செ.மீ ஆகவும், நாற்றுக்கு நாற்று இடைவெளியை 13 முதல் 28 செ.மீ. வரை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 


நாற்றுகளை 1 முதல் 4 செ.மீ. ஆழத்தில் நடலாம். மேலும், நாற்று நடும் ஆழத்தை அனைத்து வரிசைகளிலும் சீராக பராமரிக்க தானியங்கி ஆழ கட்டுப்படுத்துவானும் மற்றும் எல்லா வரிசைகளிலும் தானியங்கி சமப்படுத்துவானும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நாற்று நடவு செய்யும் இயந்திரத்திற்கு என தனியாகத் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் வளா்க்கப்பட்ட நாற்றுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆறு வரிசை நடவு இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு நாளில் சுமார் 8 ஏக்கா் வரை நடவு செய்யலாம். இந்த இயந்திரத்தின் விலை ரூ. 10,00,000/- ஆகும்.


கூம்பு வடிவ களை எடுக்கும் கருவி


இக்கருவி எளிதில் சுழலும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ள இரண்டு கூம்பு வடிவ உருளைகளையும் சேற்றில் எளிதாகத் தள்ளிச் செல்வதற்கேற்ற மிதப்பான் என்ற அமைப்பையும், இயக்குபவர் நடந்தவாறே தள்ளிச் செல்லத்தக்கவாறு நீண்ட கைப்பிடி ஒன்றையும் கொண்டது. கருவியை முன்னும் பின்னுமாக அசைத்து இயக்கும் போது உருளைப் பகுதியில் உள்ள சுத்தி போன்ற அமைப்புகள் களையை வேருடன் பிடுங்கிப் போடுகின்றன. கருவியை இயக்கிச் செல்பவர் அவற்றின் மீது நடந்து செல்லும் போது களைகள் மண்ணுக்குள் மிதிக்கப்பட்டு மக்குவதற்கு ஏதுவாகிறது. இக்கருவி வரிசையில் நடவு செய்யப்பட்ட நெல் வயல்களில் மட்டுமே பயன்படும். இக்கருவியின் விலை ரூ.1,800/- ஆகும்.


விசைக் களையெடுப்பான்


விசைக் களையெடுப்பான் என்ஜின், பற்சக்கரப்பெட்டி, இரும்புச்சட்டம், சுழல் உருளை, மிதவை, கைப்பிடி போன்ற பாகங்களை உள்ளடக்கியது. மென்தகட்டால் உருவாக்கப்பட்ட இரும்புச் சட்டத்தின் மேல் என்ஜினும் இதர பாகங்களும் பொருத்தப்பட்டுள்ளன. என்ஜின் வேகத்தைக் கட்டுப்படுத்த கைப்பிடியின் இடப்புறம் வேகக்கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது. பக்கவாட்டு வரிசைகள் களையெடுக்கும் உருளைகளால் களையெடுக்கப்படுகின்றன. களையெடுப்பானை 22 முதல் 26 செ.மீ. வரை வரிசை இடைவெளிக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். இதன் மூலம் நாளொன்றுக்கு 1.0 எக்டா் நிலத்தில் களையெடுக்கலாம். இந்த இயந்திரத்தின் விலை ரூ.40,000/- ஆகும்.



அறுவடை செய்து கட்டு கட்டும் இயந்திரம்


இந்த இயந்திரத்தின் முன் பகுதியில் நெல் தாள்களைச் சீராக பிரித்துக் கொடுக்க கூம்பு அமைப்புகளும் அடிப்பாகத்தில் தாள்களை எளிதில் வெட்டும் வண்ணம் பல முனைகளைக் கொண்ட கத்தியும், வெட்டிய தாள்களை நடுவே தள்ளி விடுவதற்கு வார்ப்பட்டையும் உள்ளது. நடுவே சேகரிக்கப்படும் அறுவடை செய்யப்பட்ட நெல், குறிப்பிட்ட எடையைத் தாண்டும் போது முடிச்சு போடும் அமைப்பு நூலைக் கொண்டு சுற்றி முடிச்சு போட்டு கீழே தள்ளி விடுகிறது. இவ்வாறு தள்ளிவிடப்படும் ஒவ்வொரு சிப்பமும் 5.0 கி.கி எடை கொண்டது. இந்த இயந்திரத்தைக் கொண்டு நாளொன்றுக்கு 2.5 எக்டா் வரை நெல் அறுவடை செய்யலாம். இந்த இயந்திரத்தின் விலை ரூ.3,00,000/- ஆகும்.


ஒருங்கிணைந்த நெல் அறுவடை இயந்திரம்


தமிழ்நாட்டில் பல்வேறு வகை அறுவடை இயந்திரங்கள் உபயோகத்தில் உள்ளன. நெல் பயிருக்கான சிறிய வடிவ கூட்டு அறுவடை இயந்திரத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இது மணிக் கதிர்களை மட்டும் பிரித்தெடுக்கும் அறுவடை இயந்திரம். இந்த இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்யும் போது வைக்கோல் முழுமையாக துண்டாகாமல் வரும். அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் தூற்றுதல் போன்ற வேலைகளை ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் செய்து முடிக்கிறது. இந்த இயந்திரத்தைக் கொண்டு நாளொன்றுக்கு 10 ஏக்கர் வரை அறுவடை செய்யலாம். இந்த இயந்திரத்தின் விலை ரூ.20,00,000/- ஆகும்.


வைக்கோல் சிப்பம் கட்டும் இயந்திரம்


நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்த பின்பு வயலில் உள்ள வைக்கோலை இந்த இயந்திரத்தைக் கொண்டு எளிதாக சேகரித்து, சுருக்கி கட்டு கட்டாக கட்ட முடியும். செவ்வக வடிவம் மற்றம் உருளை வடிவம் என இரண்டு வகை வைக்கோல் சிப்பம் கட்டும் இயந்திரங்கள் உள்ளன. 



நாளொன்றுக்கு 1.0 முதல் 1.5 எக்டர் வரை உள்ள நிலத்திலுள்ள வைக்கோலைக் கட்ட முடியும். இதன் மூலம் 10 முதல் 15 கி. கி எடையுள்ள (ஈரப்பதத்பை் பொருத்து) வைக்கோல் சிப்பங்களை மணிக்கு 15 முதல் 20 வரைக் கட்ட முடியும். இந்த இயந்திரத்தின் விலை ரூ.3 முதல் 5 இலட்சம் வரை ஆகும்.


விஞ்ஞான முன்னேற்றத்திற்கேற்ப நவீன பயன்மிகுந்த பண்ணைக் கருவிகளைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினால் மட்டுமே வேளாண்மைத் தொழில் நலிவடையாமல் சிறந்து விளங்கி உழவர்கள் எதிர்பார்க்கும் வருமானத்தைப் பெறமுடியும்.


தகவல்கள் : ம.மலர்கொடி, ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் செ.சுகன்யா கண்ணா, நீர்வள நிலவளத் திட்டம் – TNIAMP, வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் மாவட்டம்.


மேலும் படிக்க....


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post