மாடுகளில் சினை பிடிக்காமை மற்றும் அதன் மேலாண்மை பற்றிய முழு தொகுப்பு!!



மாடுகளில் சினை பிடிக்காமை மற்றும் அதன் மேலாண்மை பற்றிய முழு தொகுப்பு!!


கறவை மாட்டுத்தொழில் இலாபம் பெறுவது என்பது பண்ணையில் உள்ள பசுக்களின் சினைப்பெருக்கத் திறனைப் பொறுத்தது, கிடேரிகள் மற்றும் கறவை மாடுகள் சரியான காலத்தில் சினைப்பிடித்து வருடம் ஒரு கன்று என்று தவறாமல் ஈனும் பொழுது பால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிறது.


இவ்வாறு நடக்காமல் போனால் மாடுகள், மலட்டு மாடாக இருப்பதால் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. ஆகையால் மாடுகள் சினை தங்காமல் இருப்பதற்கான காரணங்களையும் அவைகளைத் தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகளையும் விவசாயிகள் தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அதிக இலாபம் ஈட்டலாம்.


பசுக்களில் ஏற்படும் மலட்டுத்தன்மையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, தற்காலிக மலட்டுத் தன்மை, நிரந்தர மலட்டுத் தன்மை.



தற்காலிக மலட்டுத் தன்மை


கறவை மாடுகளை இந்த மலட்டுத் தன்மை தான் அதிகமாக பாதிக்கிறது. மூன்று முறை சரியான முறையில் சரியான பருவத்தில் கருவூட்டல் செய்த பின்னரும் சினைபிடிக்காமல் இருப்பது தற்காலிக மலட்டுத்தன்மை ஆகும். இதற்கான முக்கிய காரணங்களை பற்றி இங்கே காண்போம்.


முறையான மற்றும் சரியான பராமரிப்பின்மை


பராமரிப்புக் குறைபாடு என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றன. அவைகளை பற்றி நாம் விரிவாக தெரிந்துக் கொள்வோம்.


சரியான சினைப்பருவத் தருணத்தைக் காணத்தவறுதல்


பொதுவாக சினை பருவம் கிடாரிகளில் 12 மணி நேரமும், பசுக்களில் சுமார் 18 மணி நேரமும், எருமைகளில் சுமார் 16லிருந்து 24 மணி நேரமும் காணப்படும். சரியான சினைபருவத்தை கால்நடை வளர்ப்பவர் போதிய நேரம் ஒதுக்கி கறவை மாடுகளை முறையாக கண்காணிப்பதன் மூலமே கண்டறிய முடியும்.


சினைப்பருவத்திற்கான சில அறிகுறிகள்


சினை பருவ அறிகுறிகளை முழுமையாக தெரிந்து இருத்தல் மிகவும் அவசியம். அப்பொழுது தான் சினை பருவ வெளிப்பாட்டை எளிதாகவும், சரியான நேரத்திலும் கண்டறிய முடியும்.


சினைப்பருவத்திற்கு வந்த மாடுகள் கொட்டடியில் அமைதியாக இருக்காது, அடிக்கடி சிறுநீர் கழிக்கும், சரியாக தீவனம் உண்ணாது, தண்ணீர் சரியாக குடிக்காது, மாடு அடிக்கடி விட்டு விட்டு கத்திக்கொண்டே இருக்கும், மற்ற மாடுகள் மேல் தாண்டும், மற்ற மாடுகள் தன் மேல் தாண்டவும் அனுமதிக்கும், 


மாட்டில் பாலின் அளவு திடீரென குறையும், மாட்டின் இனப்பெருக்க அறையிலிருந்து கண்ணாடி போன்ற திரவம் ஒழுகும், மாட்டின் இனப்பெருக்க அறை வீங்கி இருக்கும், இந்த அறிகுறிகள் தென்பட்ட நேரத்திலிருந்து, ஒரு நாள் அல்லது 12 மணி நேரத்தில் சினை ஊசி போட வேண்டும்.



சினைப்பருவம் அறிய உதவும் வழிகாட்டிகள்


சுவர் அட்டவணை


இனப்பேருக்கச் சக்கரம் மற்றும் மாடுகள் ஒவ்வொன்றைப் பற்றிய தனிப்பட்ட பதிவேடு ஆகியவற்றை சரிவரப் பராமரித்து வர வேண்டும்.


ஓரு மாடு கன்று ஈன்றவுடன் முதல் முறை எப்போது சினைப்பருவம் அடைகிறது என்ற தேதியைக் குறித்துக் கொண்டு அதன் அடிப்படையில் வாய்ப்புள்ள மாடுகளின் பட்டியலை முன்கூட்டியே கணித்து, அந்த மாடுகளைக் கூடுதல் கண்காணிப்பில் வைத்திருந்து, சினைப்பருவம் அறிந்து சரியான தருணத்தில் கருத்தரிக்கச் செய்ய வேண்டும்.


இரண்டாம் நிலை சினைப்பருவ அறிகுறிகளை கொண்டும், சரியான சினை தருணத்தை கண்டறிய முடியும்.


தாண்டும் பழக்கம் அறிதல்


பெரிய மாட்டு பண்ணைகளில் மாடுகள் குழுக்களாக அடைக்கப்படுகின்றன. அவ்வாறு குழுக்களாக அடைக்கப்படும் மாடுகளில், சினைப்பருவத்திலிருக்கும் மாடுகள் தாண்டப்படுவதை அடையாளம் காண, வால் பகுதியில் மேல்புறம் வண்ணச் சாயம் தீட்டி வைக்கலாம். திரவ வண்ணம் அல்லது வண்ணத் துகள்களை பயன்படுத்தலாம்.


அந்த வண்ணங்கள் சினை பருவம் வந்த மாடுகள் மீது மற்ற மாடுகள் தாவும்போது அழிந்து போகும். அதன் மூலமும் நாம் மாடுகள் சினை பருவத்துக்கு வந்ததை எளிதாக கண்டறியலாம்.



பிற மாடுகளைப் பயன்படுத்துதல்


இனச்சேர்க்கையில் தீவிரம் காட்டும் குணமுடைய எருதுகளையும், கருமுட்டைப்பைக் கட்டி உள்ள மாடுகள், குறிப்பிட்டக் கணநீர் செலுத்தப்பட்ட கிடேரிகள், எருதுகள் ஆகியவற்றையும் சினைப்பருவம் அடைந்துள்ள மாடுகளை அடையாள காணப் பயன்படுத்தலாம். 


இந்த மாடுகள் சினை பருவம் வந்த மாடுகளின் பின்பக்கம் கொண்டு செல்லும் போது அவைகள் மீது இந்த மாடுகள் தாவும். இதை கொண்டும் நாம் மாடுகள் சினை பருவத்துக்கு வந்ததை எளிதாக கண்டறிய முடியும்.


தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் கண்காணித்தல்


அதிக எண்ணிக்கையில் மாடுகளை வளர்க்கும் பண்ணைகளில் துவக்கத்தில் சினை பருவம் அறிகுறிகள் நன்கு தெரிந்த வேலையாள் மூலம் அடையாளம் காணப்பட்டு, பின்பு சினைப்பருவ மாடுகள் தேர்ச்சி பேற்ற மேற்பார்வையாளரிடம் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யலாம். அவர் கருத்தரிப்புக் கெனச் செயற்கை முறை இனவிருத்தி செய்யபட வேண்டி காலத்தை நிர்ணயிக்க வேண்டும்.


பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களும் மாடுகளில் சினை பருவத்தை கண்டறிய சில மாட்டு பண்ணைகளில் மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.


பொதுவாக அமாவாசை மற்றும் பெளர்ணமி காலங்களில் மட்டும் கால்நடைகள் சினைப் பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன என்ற தவறான கருத்துக்கள் சில மக்களிடையே உள்ளன. இது முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும். நல்ல ஆரோக்கியமான கால்நடைகள் 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைப் பருவத்தை அடைகின்றன.


எனவே கால்நடை வளர்ப்பவர் மாடுகள் சினையுறும் வரை தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் குறைந்தது 20 நிமிடங்கள் சினை பருவ அறிகுறிகள் தங்கள் மாடுகளில் வெளிப்படுகின்றனவா என்பதை தவறாமல் பார்க்கவேண்டும்.


மேலும் மாடுகள் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை குறைந்த இடைவேளியிலோ அல்லது 30-40 நாட்களுக்கு ஒரு முறை நீண்ட இடைவெயிலோ வந்தால் நீங்கள் கால்நடை மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.


சரியான பருவத்தில் கருவூட்டல் செய்யத் தவறுதல்


சினைப்பருவத்தில் உள்ள பசுக்களை சரியான நேரத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும், சினை ஊசிபோட சரியான நேரம் சினைப்பருவம் ஆரம்பித்து 10-12 மணி நேரம் ஆகும்.



அதாவது பசுக்கள் காலையில் சினைப்பருவத்திற்கு வந்தால் அதே நாள் மாலையிலும், மாலையில் சினைப்பருவத்திற்கு வந்தால் அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.


சினை பருவமடைந்த பசுக்களைப் பொதுவாக வெப்பம் குறைவான நேரங்களில் கருவூட்டல் செய்தல் மிகவும் நல்லது. குளிர்ந்த வெப்பநிலை கருத்தரிப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே காலையிலோ அல்லது மாலையிலோ மட்டுமே சினை ஊசி போடுவதன் நாம் மாடுகளில் சினை பிடிப்பதை அதிகரிக்க முடியும்.


அதிக அளவு சுற்றுப்புற வெப்பநிலை நிலவும் சமயங்களில் கருவூட்டல் செய்யும் போது சினையாகும் வாய்ப்புகள் குறைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.


அதிக வெப்பமும், வெப்பக்காற்றும், கருத்தரிப்பை தடை செய்கின்றன. ஆகவே கோடைக் காலத்தில் நிறைய மாடுகளுக்கு சினைத்தரிப்பதில்லை. கோடையிலும் காலை மற்றும் மாலையில் மட்டுமே சினை ஊசி போடுவதன் நாம் மாடுகளில் சினை பிடிப்பதை அதிகரிக்க முடியும்.


மேலும் கோடையில் கருவூட்டலுக்கு முன்பும் பின்பும் குளிர்ந்த நீரால் நாம் மாடுகளை நன்கு குளிப்பாட்டுவதன் மூலம் மாடுகளில் சினை தங்குவதை அதிகரிக்க முடியும்.


தாமதமான கருத்தரிப்பு


மாடுகள் கன்று ஈனும் போது சிரமப்பட்டு ஈன்றால் அதனால் கருப்பையில் புண் ஏற்பட்டு பலவீனமாகி கருத்தரிப்பு தாமதப்படலாம், ஹார்மோன் பிரச்சனைகளினால் கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவதால் சில பசுக்களில் கருத்தரிப்பு நிற்காது.


கன்று ஈன்றபின் நச்சுக்கொடி உடனே வெளியாகாமல் நீண்ட நேரம் தங்கினால் கர்ப்பை பலவீனமாகி புண் ஏற்படும், கர்ப்பையில புண் இருந்தால் சினைப் பருவ நாளான்று ஒழுகும் திரவம் கண்ணாடி போன்று இல்லாமல் தயிர் போல வெள்ளை நிறமாக இருக்கும். இந்த நேரத்தில் கருவூட்டல் செய்யக்கூடாது. நீங்கள் உனடியாக கால்நடை மருத்துவரை அணுகி மருத்துவம் செய்ய வேண்டும்.


சில பசுக்களில் சினை பருவம் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும், அப்பசுக்களுக்கு முதல் நாளும், அடுத்த நாளும், கருவூட்டல் செய்ய வேண்டும், சில சினை பருவம் அடிக்கடியும் தொடர்ந்தும் இருக்கும். அத்தகைய மாடுகளை கால்நடை மருத்துவரை அணுகி நீங்கள் சரி செய்வதன் மூலம் சினை பிடிப்பதை அதிகரிக்க முடியும்.


பலமுறை அதாவது மூன்று, நான்கு முறை கருவூட்டல் செய்தும் மாடுகள் சினைத் தரிக்கவில்லையென்றால், அடுத்த பருவத்தில் கருவூட்டல் செய்ய வேண்டாம். மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று கருப்பையை சுத்தம் செய்ய வேண்டும்.


கருவூட்டல் நேரத்தில் ஏற்படும் அயர்ச்சி


கருவூட்டல் செய்ய வேண்டிய பசுக்களைக் கருவூட்டல் செய்வதற்கு முன்னும், பின்னும் மிகவும் அமைதியான வகையில் கையாள வேண்டும். அதாவது அவற்றை மிரட்டவோ அல்லது அடிக்கவோ அல்லது மிக விரைவாக ஓட்டிச் செல்லவோ கூடாது.


சினை ஊசி போடும்போது பசுக்களை அடித்தல், அதிக தூரம் நடத்திச் செல்லுதல் போன்றவை பசுக்கள் சினைப்பிடிப்பதில் பிரச்சினையை உண்டாக்குகிறது.


அதிக தூரம் நடத்தி சென்றால். கருவூட்டல் செய்வதற்கு முன்பும் கருவூட்டல் செய்த பின்பும் சிறிது நேரம் (15-30 நிமிடங்கள்) மாடுகளை ஓய்வுக்காக கட்டி வைத்தல் நன்று. மருத்துவமனைக்கு ஓட்டிச் செல்லும் போது காலையில் ஓட்டி செல்ல வேண்டும், வெயிலில் ஓட்டி செல்லக்கூடாது.


போக்குவரத்து நெரிசல், நெரிசலில் மாடுகளை சினை ஊசி போட ஓட்டி செல்லக்கூடாது, சில கிராம மக்கள் கருவூட்டல் செய்த பின்னர் கால்நடைகளைப் படுப்பதற்கு அனுமதிப்பதில்லை. மேலும் அவற்றிற்கு தீவனம் மற்றும் தண்ணீர் அளிப்பதை பகல் முழுவதும் தவிர்த்து விடுகின்றனர். இது தவறான ஒரு செயல்முறையாகும். இவைகள் பசுக்கள் சினைப் பிடிப்பதில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும்.



எனவே மாடுகளுக்குக் கருவூட்டல் செய்தஉடன் அவற்றை மெதுவாக ஓட்டிச் செல்ல வேண்டும், மேலும் அவைகளுக்கு போதுமான பசுந்தீவனம் மற்றும் பிற தீவனங்களை வணங்குவதுடன் குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தல் மிகவும் நல்லது.


தீவனம் மற்றும் சத்துப் பற்றாக்குறை


பசுக்களும், எருமைகளும் நல்ல உடல் நலத்துடன் இருந்தால் தான் கருத்தரிக்க முடியும். அதற்கு நாம் சரிவிகிதக் கலப்புத்தீவனம் போதுமான அளவு தர வேண்டும்.


தவிடு, பொட்டு, புண்ணாக்கு இவைகள் கலந்த கலப்புத் தீவனம் தர வேண்டும். பசுக்களின் எடை மற்றும் அவைதரும் பாலின் அளவு இவைகளைப் பொறுத்து நாம் தீவனத்தின் அளவை முடிவு செய்வதன் மூலமே நாம் அவைகளின் சினை பிடிக்கும் திறனை அதிகரிக்க முடியும்.


தேவையான சத்து பொருட்கள் சரியான விகிதத்தில் பசுக்களுக்கு கிடைக்காத போது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. முக்கியமாக புரதம் மற்றும் இரும்புச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், குளோரின், மெக்னீசியம், கந்தகம், அயோடின், மாங்கனீஸ், துத்தநாகம், கோபால்ட் மற்றும் தாமிரம் போன்ற தாது உப்புக்கள் சரியான அளவில் இருப்பது அவசியம், இவைகள் கர்ப்பப்பை வளர்ச்சிக்கு இன்றியமையாதது.


மெக்னீசியம் போன்ற தாதுஉப்புகள் உடல் சீராக இயங்க உதவுகின்றன. மாவுச்சத்துக்கள் சரியாக இல்லாத தீவனம் கொடுக்கும் போது கருத்தரிப்பு பாதிக்கப்படும். பசுக்களுக்கு புரதம், தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்துக்கள் போன்றவைகளை தேவையான அளவு அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் மலட்டுத் தன்மையை தவிர்க்க முடியும்.


இனப்பெருக்க உறுப்புகளைத் தாக்கும் நோய்கள்


இனப்பெருக்க உறுப்புகளை தாக்கும் சில நோய்கள் பசுக்களிடையே மலட்டுத்தன்மையை எற்படுத்துகின்றன. சில நேரங்களில் பசுக்களை போலி காளைகள் மூலம் சினைப்படுத்தும் போது அந்த காளை நோய்யுற்றிருந்தால் பசுவின் இனப்பெருக்க உறுப்புகளில் புண் ஏற்பட்டு சீழ் போன்ற திரவம் அறையிலிருந்து வடியும். அதனை வெட்டை என்றும் கூறுவார்கள். 


இதனால் கறவை மாடுகள் கருவுற்றாலும் பாதியிலேயே கன்று வீசி விடும். மேலும் கறவை மாடுகளில் இந்நோய் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்துவதால் நோயுற்ற போலிகாளைகள் மூலம் கருவூட்டல் செய்ய கூடாது. பசுக்கள் கன்று ஈனும் காலத்தில் அதிகமாக இனப்பெருக்க நோய்கள் வருகின்றன. 


பசுக்கள் சுகாதாரமற்ற இடத்தில் கன்று ஈனுவதாலும் கன்று ஈனும் நேரத்தில் ஏதெனும் சிரமம் ஏற்படும்போது கன்றை வெளியே எடுக்க சுகாதாரமற்ற முறைகளைப் பின்பற்றுவதாலும் கருப்பையில் புண் எற்படுகிறது.


இதனாலும் பசுவின் உற்பத்தி குறைந்து, துர்நாற்றமுடைய சீழ் வடிந்து, நோய் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே பாதிக்கப்பட்ட மாடுகளை உடனே கால்நடை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளிக்க வேண்டும்.



கன்று ஈன்ற பின் கருப்பையில் நஞ்சுக்கொடி தங்கினால், சரியான சிகிச்சை அளிக்காத போது கருப்பையில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. சாதாரணமாக மாடுகள் கன்று ஈன்ற 8-12 மணி நேரத்திற்குள் நஞ்சுக் கொடி தானாகவே விழுந்துவிடும். அவ்வாறு விழாமல் கருப்பையிலேயே தங்கியிருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும்.


கண நீர் பற்றாக்குறை


பசுக்கள் உரிய காலத்தில் சினைப்பருவதற்கு வந்து கருவுறுவதற்கு பசுவின் உடலில் சில கணநீர்கள் சரியான அளவில் இருப்பது அவசியமாகும். கணநீரின் அளவ குறையும் போது பசுக்கள் கருவுறாமல் மலட்டுத் தன்மையை உண்டாக்குகிறது.


லுர்ட்டினைசிங், கணநீரின் அளவு குறையும்போது வளர்ச்சியடைந்த கரு முட்டை சூலகத்திலிருந்து வெளிவர முடியாமல் கட்டியாக மாறுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பசுக்கள் 10 நாட்கள் அல்லது வாரத்திற்கு ஒரு முறை பருவத்திற்கு வந்து கொண்டிருக்கும்.


மேலும் சில பசுக்கள் கருவுற்றபின் புரொஜெஸ்ட்ரான் என்ற கணநீர் பற்றாக்குறை ஏற்படும்போது கரு கலைந்து விடும், இவ்வாறு கணநீர் குறைவினால் ஏற்படும் குறைகளை கால்நடை மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.


மரபியல் மற்றும் உடற்கூறு பிரச்சனைகள்


சூலகம், கருக்குழாய், கருப்பை வாய், பெண் மாட்டின் இனப்பெருக்க உறுப்பு ஆகியவற்றில் ஏற்படும் மரபியல் சார்ந்த பிரச்சனைகளாலும் பிறவிக் கோளாறுகளாலும் கூட சினைத் தங்காமல் போக வாய்ப்புள்ளது. இத்தகைய நோய்களை சரிசெய்வது பெரும்பாலும் கடினமானதாகும்.


கிடேரிகளை சினைப்படுத்துதல்


கிடேரிக் கன்றை இனவிருத்தி செய்யும்போது அது சினைத் தருணத்திற்கு வரும் வயதை கணக்கிடுவதோடு மட்டுமல்லாது தகுந்த உடல் எடையினை அடைந்து விட்டதா, இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்து உள்ளதா என்று பார்க்க வேண்டும்.


வளர்ச்சி குன்றிய அல்லது உடல் எடை குறைந்த கிடேரிகளை இனவிருத்தி செய்வதால் கன்று ஈனும் காலத்தில் மிகவும் சிரமம் ஏற்பட்டு மலட்டுத் தன்மை அடைகிறது.


நிரந்தர மலட்டுத்தன்மை


நிரந்தர மலட்டுத்தன்மை சினை பிடிக்காத பசுக்களில் 5 முதல் 10 சதவிகிதம் வரை மட்டுமே காணப்படும். இதற்கு முக்கிய காரணம் பசுக்களின் இனப்பெருக்க உறுப்புகளில் கோளாறுகள். மேலும் இரட்டைக் கன்றாக ஆண் கன்றுடன் பிறந்த பெண் கன்றின் இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்படைந்து விடுவதால் இந்த கன்றும் சினையாகாது.


விந்தணு, சினை முட்டை ஆகியவற்றில் உள்ள மரபணுக்களில் அழிவு குணங்கள் இருந்தால் கருவுறுதல் பாதிக்கப்படும். வயது முதிர்ந்த பசுக்கள், குறைபாடுள்ள கருமுட்டைகளை உருவாக்குவதால் வயது அதிகமான மாடுகளில் சினைப்பிடிக்க தாமதம் ஏற்படுகின்றது.



மாடுகள் சினைப் பிடிக்கவில்லையெனில் எத்தனை நாளுக்கு ஒருமுறை சினைப் பருவத்திற்கு வருகிறது என்று பார்க்கவேண்டும். சினை ஊசி போட்ட 21 நாட்களுக்கு பின் சினைத் தருண அறிகுறிகளை வெளியிட்டால் அது சினை பிடிக்கவில்லை என்பது தெரிந்துவிடும். உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து தகுந்த சிகிச்சை அளிக்க் வேண்டும்.


தகவல்: முனைவர் கா.இரவிக்குமார், மரு.அ.கணேசன் மற்றும் முனைவர் எ.பழனிசாமி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி – 627 358.

 

மேலும் படிக்க....


யாருக்கும் தெரியாத சில யுக்திகள்! கோழிப் பண்ணையில் லாபம் ஈட்டுவது எப்படி?


குறைந்த செலவு மற்றும் எளிமையான பராமரிப்புடன் போயர் ஆடு வளர்த்து அதிக வருமானம் பெறலாம்!


ஒருங்கிணைந்த விவசாயம் மூலம் பண்ணையம் அமைத்து லாபம் பெறுவது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments