நெல் தரிசு
பயிறு வகை சாகுபடியில் உயர் விளைச்சல் ரகங்களும் மற்றும் விதை தரங்களும் சிறப்பு பார்வை!!
காவேரி டெல்டா
பாசனப்பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருச்சி
மாவட்டங்களில் 1.46 முதல் 1.6 லட்சம் எக்டரில் உளுந்து மற்றும் பச்சைப்பயிறானது நெல்
தரிசில் பயிரிடப்படுகின்றன. காவேரி டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல்
அறுவடைக்கு முன்பாக மெழுகு ஈரப்பதத்தில் பயிறுவகை பயிர்களின் விதைகள் விதைக்கப்பட்டு
சாகுபடி செய்யப்படுகிறது.
பெரும்பாலும்
இந்தவகை சாகுபடியில் பயறுவகை பயிர்கள் நெல் தரிசில் வயலிலுள்ள ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களை
பயன்படுத்தி சாகுபடி செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு அதிக உற்பத்தி செலவின்றி வருவாய்
கிடைக்கிறது. ஆனால் நெல் தரிசு பயறுவகை சாகுபடி தற்போது பல்வேறு சோதனைகளை எதிர்கொள்ள
வேண்டியுள்ளது. பெரும்பாலும் நெல் அறுவடை பணிகள் நெல் அறுவடை இயந்திரம் மூலமே நடைபெறுகிறது.
இதனால் மகசூல் குறைவாகவே உள்ளது.
இந்த வகை சாகுபடியில்
பின்வரும் காரணங்களால் உற்பத்தி திறன் குறைவாகவே உள்ளது. குறைந்த உற்பத்தி கொண்ட இரகங்களைப்
பயன்படுத்துதல் மற்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ள உயர் விளைச்சல் இரகங்கள் பற்றிய
போதிய விழிப்புணர்வு இன்றி இருத்தல், தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தாமல் இருப்பது,
சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்காமல் இருப்பது மற்றும் பரிந்துரை செய்யப்படும் நவீன
சாகுபடி தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்காமை ஆகியவைகளாகும்.
மேலும் நெல் தரிசு பயிர் சாகுபடியில் பயறுவகை பயிர்களின் விளைச்சலை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கும்போதும் உயர் விளைச்சல் அடைவதற்க்கு புதிய உயர்விளைச்சல் தரக்கூடிய இரகங்கள், முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே விவசாயிகள்; நெல் தரிசு பயிர் சாகுபடியில் பயறுவகை பயிர்களின் விளைச்சல் திறனை மேம்படுத்தி உயர் விளைச்சல் பெற நெல் தரிசுக்கு தகுந்த வறட்சியை தாங்கும் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ள உயர் விளைச்சல் இரகத்தினை தேர்வு செய்து, இரகங்களின் குணாதிசயங்களை அறிந்து அந்த இரகத்தின் தரமான விதைகளை உபயோகிப்பதன் மூலம் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரித்து, பயிர்களின் வளர்ச்சிக்கேற்ற தொழில்நுட்பங்களை கையாள்வதன் மூலம் அதிக மகசூல் பெறமுடியும்.
தமிழ்நாட்டில்
உளுந்து பயிரில் இதுவரை வம்பன்-3, வம்பன்-4, வம்பன்-5, வம்பன்-6, வம்பன்-7, வம்பன்-8,
வம்பன்-9 வம்பன்-10 வம்பன்-11 கோ-5, கோ-6, கோ-7, எடிடீ-3, எடிடீ-5, எடிடீ-6, டி.எம்.வி.1,
எபிகே-1 ஆகிய இரகங்கள் பூச்சி நோய், மற்றும் வறட்சி ஆகியவற்றை தாங்கி வளரக்கூடிய நல்ல
விளைச்சல் தரவல்ல மேம்படுத்தப்பட்ட இரகங்களாகும். இவற்றில் எடிடீ-3, எடீடி-5, எடிடீ-6,
வம்பன்-4, கோ(ஜி.ஜி)7, கோ-8 போன்ற இரகங்கள் நெல் தரிசு (ஜனவரி) மற்றும் கோடை இறவையில்
(பிப்ரவரி) பயிரிட ஏற்ற இரகங்களாகும்.
எடீடி-3
நெல் தரிசில்
பயிரிட ஏற்ற இந்த இரகம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தனித்தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது.
இதன் வயது 70-75 நாட்கள் மானாவாரியில் ஒரு எக்டருக்கு 720 கிலோ மகசூல் தரவல்லது. இந்த
இரகம் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. கரும்பழுப்பு நிற
விதைகளையுடைய இந்த இரகத்தின் 1000 விதைகள் எடை 36 கிராம் ஆகும்.
எடீடி-5
62 நாட்கள்
வயதுடைய இந்த இரகம் கான்பூர் இரகத்தில் இருந்து தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது.
மானாவாரியில் ஒரு எக்டருக்கு 1300 கிலோ மகசூல் தரவல்லது. இது மஞ்சள் தேமல் நோய், வேரழுகல்
நோய், இலை தெளிவு நோய் மற்றும் தண்டு ஈ தாக்குதலைத் தாங்கி வளரும். இந்த இரகம் நெல்
தரிசு, கோடை இறவைப்பட்டம் மற்றும் வரப்பு உளுந்தாக பயிரிட ஏற்ற இரகம். கருப்பு விதைகளைக்
கொண்ட இந்த இரகத்தின் 1000 விதைகளின் எடை 36 கிராம் ஆகும்.
ஆடுதுறை-6
தமிழ்நாடு நெல்
ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2016ம் ஆண்டு நெல் தரிசில் சாகுபடிக்கு ஏற்ற இரகமாக
வெளியிடப்பட்டது. இந்த இரகம் வம்பன்-1 மற்றும் விபிஎன் 04-006 ஆகிய பெற்றோர்களை இனக்கலப்பு
செய்து உருவாக்கப்பட்டது. இந்த இரகம் 65-70 நாட்களில் எக்டருக்கு சராசரியாக 741 கிலோ
மகசூல் தரவல்லது. இது மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோய் மற்றும் அடிச்சாம்பல் நோய்களுக்கு
மிதமான எதிர்ப்புத் திறனைக் கொண்டது. உயரமாக வளர்வதால் இயந்திர அறுடைக்கு ஏற்றது.
வம்பன்-4
தமிழகத்தின்
அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்ற இந்த இரகம் கோ-4 மற்றும் பிடியூ-102 ஆகிய பெற்றோர்களை
இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 75-80 நாட்கள், மானாவாரியில் எக்டருக்கு
780 கிலோவும் மற்றும் இறவையில் எக்டருக்கு 900 கிலோ விளைச்சலும் தரவல்லது. இந்த இரகம்
மஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. செடிகள் 40 முதல் 45 செ.மீ.
உயரம் வரை வளரும். கருப்பு நிற விதைகளையுடைய இந்த இரகத்தின் 1000 விதைகள் எடை 48 கிராம்
ஆகும்.
வம்பன்-6
65 முதல்
70 நாட்கள் வயதுடைய இந்த ரகம் வம்பன்-1 மற்றும் விக்னா முங்கோ வார்சில்வெஸ்ட்ரின்ஸ்
ஆகிய பெற்றோர்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும்
ஆடிப்பட்டம், பரட்டாசிப்பட்டம் மற்றும் தைப்பட்டத்தில் பயிரிட ஏற்றது. சாயாத இரகம்
உதிராத பூக்களை ஒரு சேரப் பூக்கும் திறன் உள்ளது. மஞ்சள் சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு
திறன் உள்ளது. மானாவாரி மற்றும் இறவை சாகுபடிக்கு ஏற்ற இந்த ரகம் மானாவாரியில் ஒரு
எக்டருக்கு 850 கிலோ உளுந்து மகசூலும், இறவையில் ஒரு எக்டரில் 890 கிலோ உளுந்து மகசூலும்
தரவல்லது.
வம்பன்-8
இந்த இரகம்
வம்பன்-3 மற்றும் பிஎன் 046-008 ஆகிய இரண்டின் கலப்பு ஆகும். 65-70 நாட்கள் வயதுடைய
இந்த இரகம் தைப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் ஆடிப்பட்டம் என மூன்று பருவங்களிலும்
பயிரிட ஏற்றது. இதன் சராசரி மகசூல் எக்டருக்கு 900 கிலோ ஆகும். 5 செ.மீ. வரை நீளமுள்ள
இந்த இரகத்தின் காய்களில் 7 முதல் 8 விதைகள் இருக்கும். கருப்பு நிற விதைகளை உடைய இ;ந்த
இரக விதைகளின் 1000 விதைகள் எடை 50 கிராம் ஆகும். இந்த இரகத்தின் சிறப்பியல்புகள் ஒரே
தருணத்தில் முதிர்ச்சி, விதையுதிராத தன்மை, மஞ்சள், தேமல் நோய், சாம்பல் நோய் மற்றும்
இலைச்சுருள் நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. இந்த இரக காய்கள் ஒரு சேர முதிர்ச்சியடைவதால்
இயந்திர அறுவடைக்கு மிகவும் ஏற்ற இரகம்.
வம்பன்-9
தென் மாநிலங்களான
ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நெல் தரிசில் பயிரிட ஏற்ற இந்த ரகம்
மா’ 11-4 மற்றும் வம்பன் 3 ஆகிய பெற்றோர்களை கலப்பினம் செய்து
உருவாக்கப்பட்டது. 70 முதல் 75 நாட்கள் வயதுடைய இந்த ரகம் ஒரே நேரத்தில் முதிர்ச்சி
பெறும் தன்மையுள்ளது. ஒரு எக்டரில் 1230 கிலோ வரை மகசூல் தரவல்லது.
வம்பன்-10
70 முதல்
75 நாட்கள் வயதுடைய இந்த ரகம் புரட்டாசி பட்டத்தில் பயிரிட ஏற்றது. வம்பன்-1 மற்றும்
டிஎச் 04-04 ஆகிய பெற்றோர்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட இந்த ரகம் ஒரு எக்டரில்
1130 கிலோ வரை மகசூல் தரவல்லது. ஒரே நேரத்தில் முதிர்ச்சி பெறும் தன்மையுடையது. மஞ்சள்
தேமல் அசுவினி தண்டு ஈ மற்றும் புள்ளி காய்புழு தாக்குதலை தாங்கி வளரக்கூடியது.
விபிஎன்-11
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆடி, புரட்டாசி, அனைத்து பட்டங்களிலும் பயிரிட ஏற்ற இந்த ரகம் பிபு 31 மற்றும் கோ-6 பெற்றோர்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது. 70 முதல் 75 நாட்கள் வயதுடைய இந்த ரகம் ஒரு எக்டரில் 940 கிலோ வரை மானாவாரியிலும், 865 கிலோ வரை இறவையிலும் மகசூல் தரவல்லது.
வட்டவடிவ மங்கலான கருப்பு நிறத்தில் காணப்படும் இந்த ரக
விதைகளின் 1000 விதைகளின் எடை 40 முதல் 50 கிராம் வரை இருக்கும். மஞ்சள் தேமல் நோய்,
இலை நெளிவு நோய்களுக்கு எதிர்ப்புத் திறனும், சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்
திறனும் கொண்டது. 22.6 சதவிதம் புரதச் சத்தினை கொண்ட இந்த ரகம் மிகச் சிறந்த சமையல்
பண்புகளைக் கொண்டது.
கோ-6
60 முதல் 65 நாட்கள் வயதுடைய இந்த ரகம் டியூ2 மற்றும் விபி20 ஆகிய பெற்றோர்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது. புரட்டாசி பட்டத்தில் பயிரிட ஏற்ற இந்த ரகம் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது.
இயந்திர அறுவடைக்கு உகந்தது. இதன் காய்கள் வெடிக்காத மற்றும்
பருமனான விதைகளை உடையது. இந்த ரகத்தின் 1000 விதைகளின் எடை 55 கிராம் ஆகும். ஒரு எக்டரில்
733 உளுந்து மகசூலை தரவல்லது மற்றும் இது அதிக மாவு தரும் தன்மையும் கொண்டுள்ளது. மஞ்சள்
தேமல், நுனிகருகல் மற்றும் வேரழுகல் நோய்களுக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தி கொண்டது.
கோ-7
ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும் தன்மை மற்றும் இயந்திர அறுவடைக்கு ஏற்ற இந்த ரகம் விபிஎன்(பிஜி)5, விக்னா முங்கோ சில்வெஸ்ரிஸ் (22/10) ஆகிய ரகங்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது. 60 முதல் 65 நாட்கள் வயதுடைய இந்த ரகம் 4 ஆடிப்பட்டம் மற்றும் புரட்டாசி பட்டங்களில் பயிரிட ஏற்றது. மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தியுடையது.
இலை நெளிவு நோய் மற்றும்
தண்டு கருகல் நோய் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்பு சக்தியுடையது. பருமனா விதைகளையுடைய
இந்த ரக விதைகளின் 1000 விதைகளின் எடை 55 முதல் 60 கிராம் வரை இருக்கும். சொட்டு நீர்
பாசன சாகுபடியில் பயிரிட ஏற்ற இந்த ரகம் ஒரு எக்டரில் 880 கிலோ உளுந்து மகசூல் தரவல்லது.
கே.கே.எம்-1
நெல் தரிசில்
பயிரிட ஏற்ற இந்த ரகம் கோ பிஜி 643 மற்றும் வம்பன்-3 ஆகிய பெற்றோர்களை இனக்கலப்பு செய்து
உருவாக்கப்பட்டது. இதன் வயது 65 முதல் 70 நாட்களாகும். டிரம் வடிவ மங்கிய கருப்பு நிற
விதைகளையுடைய இந்த ரகத்தின் 1000 விதைகள் எடை 44.7 கிராம் ஆகும். மஞ்சள் தேமல் நோய்
மற்றும் காய் புழுவிற்கு மத்தமான எதிர்ப்புத் தன்மையும், வேர் முடிச்சி புழுவிற்கு
எதிர்ப்பு தன்மையும் கொண்டது. சிறந்த சமையல் பண்புகளையும், அதிக இட்லி மாவு காணும்
திறனும் உள்ள இந்த ரகம் ஒரு எக்டரில் 607 கிலோ உளுந்து மகசூல் தரவல்லது. அரபினோஸ் என்ற
வேதிப்பொருள் 6.7 சதம் உள்ளது.
பாசிபயிறு பயிரை
பொருத்தவரை வம்பன்(ஜிஜி-2) வம்பன்(ஜிஜி)3, கோ(ஜிஜி)7, கோ-6, கோ-8, பையூர்-1, விரிஞ்சிபுரம்-1,
எடிடீ-3, கே-1, கேம்-2 ஆகிய இரகங்கள் உயர் விளைச்சல் தரவல்ல மேம்படுத்தப்பட்ட இரகங்களாகும்.
இவற்றில் எடீடி-3,. வம்பன்(ஜிஜி)3, கோ(ஜிஜி)7 ஆகிய இரகங்கள் நெல் தரிசில் பயிரிட ஏற்ற
இரகங்களாகும்.
எடிடீ 3
இந்த இரகம்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
மாவட்டங்களில் நெல் தரிசில் (ஜனவரி – பிப்ரவரி) பியிரிட ஏற்றது. இது H 70-16, இராஜேந்திரன்
மற்றும் ஜி 65 இரகங்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 66 நாட்கள்,
மானாவாரியில் எக்டருக்கு 500 கிலோ விளைச்சல் தரவல்லது. இந்த இரகம் மஞ்சள் தேமல் நோய்
தாக்குதலை எதிர்க்கும் திறன் கொண்டது. மேலும் தண்டு ஈ தாக்குதலைத் தாங்கி வளரும். பச்சை
நிற விதைகளுடைய இதன் விதைகளின் 1000 விதைகள் எடை 23 கிராம் ஆகும்.
வம்பன்(ஜிஜி)3
தமிழகத்தின்
அனைத்து மாவட்டங்களிலும் ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டங்களில் மானாவாரியாக பயிரிட ஏற்ற
இந்த இரகம் கே-1 மற்றும் வேலூர் மாவட்ட இரகத்தினை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது.
இதன் வயது 65-70 நாட்கள். இந்த இரகம் மஞ்சள் தேமல் நோய், சாம்பல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன்
கொண்டது. மானாவாரியில் எக்டருக்கு 759 கிலோ விளைச்சல் தரவல்லது. இறவையில் எக்டருக்கு
950 கிலோ விளைச்சல் தரவல்லது. வெளிரிய பச்சை நிற விதைகளை உடைய இந்த இரக விதைகளின்
1000 விதைகள் எடை 45 கிராம் ஆகும்.
வம்பன்-4(பாசிப்பயறு)
65 முதல் 70 நாட்கள் வயதுடைய இந்த ரகம் பிடிஎம் 139 மற்றும் பிபி 2664 ஆகிய பெற்றோர்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம், மார்கழி-தைப்பட்டம், சித்திரை பட்டம் என அனைத்து பருவங்களிலும் பயிரிட ஏற்ற இந்த ரகம் மஞ்சள் தேமல் மற்றும் சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறனும் மற்றும் இலைச்சுருள் நோய்க்கு எதிர்ப்புத் திறனும் கொண்டது.
டிரம் வடிவில் மங்கிய பச்சை நிறத்தில் காணப்படும் இதன் விதைகளின்
1000 விதைகள் உடை 35 முதல் 40 கிராம் வரை இருக்கும். பலமுறை பூக்கும் மற்றும் வெடிக்காத
தன்மையடைய இந்த ரகம் ஒரு எக்டரில் 1025 கிலோ வரை மகசூல் தரவல்லது.
கோ(ஜி.ஜி)7
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆடிப்பட்டத்தில் மானாவாரியாக பயிரிட ஏற்ற இந்த இரகம் எம்.(ஜி.ஜி) 36 மற்றும் கோ(ஜி.ஜி)902 ஆகிய பெற்றோர்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 62 நாட்கள்.
இந்த இரகம் பெரிய மணிகளைக் கொண்டதாகவும், காய்கள் ஒரே சமயத்தில் முதிர்ச்சி
அடையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. அதிக புரதச்சத்து (25.2 சதம்) கொண்டது. இயந்திர
அறுவடை செய்ய ஏற்ற இரகம். மானாவாரியில் எக்டருக்கு 978 கிலோ விளைச்சல் தரவல்லது. இது
தண்டு ஈ மற்றும் மஞ்சள் தேமல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை கொண்டது.
கோ-8(பாசிப்பயிறு)
ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சி அடையும் தன்மையும் மற்றும் இயந்திர அறுவடைக்கு ஏற்ற இந்த ரகம் கோ ஜிஜி 923 மற்றும் விசி 6040 ஆகிய பெற்றோர்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. 55 முதல் 60 நாட்கள் வயதுடைய இந்த ரகம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது. இந்த ரகம் நெருக்கமாக விதைப்பு செய்வதற்கும் மக்காச்சோளம், துவரை பயிர்களில் ஊடுபயிராக சாகுபடி செய்வதற்கும் ஏற்றது. மேலும் சொட்டு நீர் பாசன சாகுபடிக்கும் உகந்தது.
விதைகள் நடுத்தர தடிமனுடன் காணப்படும். இதன் 1000 விதைகள் எடை 35 முதல் 40 கிராம் வரை
இருக்கும். இந்த ரகத்தில் 20.21 கதவிதம் புரதச்சத்து உள்ளது. மஞ்சள் தேமல் நோய்க்கு
எதிர்ப்பு சக்தியும் வேரழுகல், தண்டு அழுகல், தண்டு ஈ அசுவினி தாக்குதலுக்கு மிதமான
எதிர்ப்பு சக்தியும் கொண்டது. ஒரு எக்டரில் 1310 கிலோ வரை மகசூல் தரவல்லது.
பயறுவகை பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரித்து உயர்விளைச்சல் பெற கீழ்கண்ட முறைகளை பின்பற்றவேண்டும். சரியான பட்டத்தில் காலத்திற்கேற்றவாறு உயர் விளைச்சல் இரகத்தை தேர்வு செய்து அந்த இரகத்தில் சான்று பெற்ற தரமான விதைகளை விதைப்பு செய்யவேண்டும். மேலும் ஒரே சமயத்தில் செடிகள் முதிர்ச்சி அடைந்து அறுவடை செய்யத் தகுந்த இரகங்களை பயிரிடவேண்டும்.
மேலும் இரகங்களின் விதைத் தரங்களாக முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பூச்சிநோய் தாக்குதல் ஆகியவற்றை அறிந்து நல்ல விதைகளை விதைப்புக்கு பயன்படுத்தவேண்டும். உரிய காலத்தில் தரமான விதைகளை சம்பா, தாளடி நெல் அறுவடை ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இடங்களில் அறுவடைக்கு 7 முதல் 10 நாள்களுக்கு முன்பாகவும், இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் இடங்களில் 4 முதல் 6 நாள்களுக்கு முன்பாகவும் மெழுகு ஈரப்பதத்தில் விதைகள் விதைக்கப்படவேண்டும்.
மெழுகு பதம் இல்லையெனில் நீர்ப்பாசனம் செய்து, மெழுகு பதம் வந்தபின் விதைகளை விதைக்கவேண்டும்.
ஒரு சதுரமீட்டரில் 33 செடிகள் அதாவது ஒரு ஏக்கரில் 1,32.000 செடிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
விதைகள் முளைக்காத இடங்களில் முளை கண்ட விதைகளை மீண்டும் விதைத்து சரியான பயிர் எண்ணிக்கையைப்
பராமரிக்கவேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சு+டோமோனஸ் புளோரசன்ஸ் உயிரியல் மருந்து கொண்ட விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். இரண்டு சத டி.ஏ.பி. உரத்தையும், பிளோனோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கியையும் பூக்கும் பருவத்திலும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை இலை வழியாக தெளித்தல் மிகவும் அவசியம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின்
பயறு ஒண்டர் ஊட்டச்சத்து டானிக் 1 ஏக்கருக்கு 2.0 கிலோ அளவில் 200 லிட்டர் தண்ணீரில்
கலந்து பயிர்கள் பூக்கும் சமயத்தில் காலை நேரத்தில் இலைவழி தெளிக்கவேண்டும். பூச்சி
மற்றும் நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையை கண்காணித்து தேவை ஏற்படின் தயோடிகார்ப் 250மிலி.
அல்லது டைகுளோர்வாஸ் 400மிலி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம்
பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம்.
விவசாயிகள் அந்தந்த பகுதிகேற்ற இரகங்களை தேர்வு செய்து அதிக விளைச்சல் பெறலாம். பருவத்திற்கு ஏற்ற பயிர் இரகங்களை அறிந்த விவசாயிகள் தேர்வு செய்து விதைக்கும் இரகங்களின் தரம் அறிந்து விதைத்தால் இன்னும் கூடுதல் இலாபம் பெறலாம்.
இந்திய குறைந்தபட்ச விதைச்சான்றுத் தரங்களின்
உளுந்து பயிருக்கு 75 சதவீதம் முளைப்புத்திறன், 98 சதவீதம் புறத்தூய்மை, 9.0 சதவீதம்
ஈரப்பதம் மற்றும் பிற இன பயிர்கள், ஒரு விதைக்கு 5ம், சான்று விதைக்கு ஒரு கிலோவிற்கு
10ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் விதைகளின் புறத்தூய்மை, ஈரப்பதம்,
முளைப்புத்திறன் மற்றும் பிற இரக விதைக்கலப்பு ஆகியவற்றை மிக துல்லியமாக அறிந்து கொள்ள
அந்தந்த மாவட்ட விதைப்பரிசோதனை நிலையத்தை அணுகி பயன் பெறலாம்.
எனவே திருவாரூர்
மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தியாளர்கள், விதை விநியோகம் செய்பவர்கள், விதை விற்பனையாளர்கள்
மற்றும் விவசாயிகள் விதை பரிசோதனை மேற்கொள்ள 150 கிராம் உளுந்து விதை மாதிரியுடனும்
மற்றும் ஒரு மாதிரிக்கு ரூ.30 கட்டணத்துடன் விதை பரிசோதனை நிலையம், பெரியமில் தெரு,
விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் அணுகி பயன்பெற அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட இந்த
தகவல் திருவாரூர் மாவட்டத்திற்கான தஞ்சை சரக விதைப் பரிசோதனை அலுவலர், து.சிவவீரபாண்டியன்,
திருவாரூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ச.கண்ணன் மற்றும் வேளாண்மை
அலுவலர் க.புவனேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
தமிழகத்தில் ரூ.132 கோடி செலவில் பயிர் இழப்பீடு! 1.62 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் பாதிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...