Random Posts

Header Ads

நிலக்கடலைச் சாகுபடியின்போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்!!



நிலக்கடலைச் சாகுபடியின்போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்!!


புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலைச் சாகுபடியின்போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்துப் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 

விதை நேர்த்தி


நிலக்கடலையில் விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களான வேரழுகல், தண்டழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும்.


ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டாசிம் 50% டபிள்யு.பி. அல்லது கார்பாக்சின் பூஞ்சணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். 


ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடர்மா விரிடி அல்லது டிரைக்கோடெர்மா ஆர்சியானம் என்ற உயிரியல் பூஞ்சணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்து உடன் விதைக்க வேண்டும்.

 

உயிர் உர விதை நேர்த்தி


ஒரு லிட்டர் ஆறிய அரிசி வடிகஞ்சியில் ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய நுண்ணுயிர்ப் பொட்டலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பொட்டலம் (200 கிராம்) எடுத்துக் கொட்டி ஒரு குச்சியைக்கொண்டு நன்கு கலக்கி விதைகளைச் சாக்குப் பையின் மேல் பரப்பவும். 


தயார் செய்த நுண்ணுயிர்களின் கலவையினை விதைகளின் மேல் ஒரு இலைக்கொத்து கொண்டு விதைகளை மேலும் கீழும் புரட்டிக் கலவை நன்கு படும்படித் தெளிக்க வேண்டும். ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை விதைகளை நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.

 

திரவ நுண்ணுயிரி


தற்பொழுது திரவ வடிவிலும் நுண்ணுயிர்கள் கிடைக்கிறது. எனவே, ஒரு கிலோ விதைக்கு 10 மி.லி. ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா திரவ நுண்ணுயிரி கலந்து விதை நேர்த்தி செய்தல் வேண்டும். 


உயிரியல் மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்யும் விதைகளை இரசாயனப் பூஞ்சணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தல் கூடாது. நிலக்கடலை விதை நேர்த்தி செய்யும்போது விதையின் மேல்தோல் உரியாமல் கவனமாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதையுறையில் பாதிப்பு ஏற்படின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.

 

விதைப்பு


மானாவாரியில் ஈரத்தைப் பயன்படுத்தி ஏர் மூலம் அல்லது களைக்கொத்து கொண்டு விதைக்கலாம். சீரான பயிர் எண்ணிக்கை கிடைக்க விதைப்புக் கருவி அல்லது கொரு கொண்டு விதைக்கலாம். விதைக்கும்போது விதைகளை வரிசைக்கு வரிசை 30 செமீ ம் செடிக்கு செடி 10 செமீ இடைவெளியும் விட்டு நிலத்தில் 4 செ.மீ. ஆழத்திற்கு மிகாமல் விதைக்க வேண்டும்.

 

தொழு உரம்


நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாதது. ஒரு ஏக்கருக்க ஐந்து டன் மட்கிய தொழுஉரம் அல்லது தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் உரத்தினை இட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து மடக்கி உழவு செய்வதன் மூலம் மண் வளத்தை அதிகரிக்கலாம்.

 

இரசாயன உரம்


மண்ணாய்வு செய்து அதனடிப்படையில் உரமிடுவதே சிறந்தது. மண்ணாய்வு செய்யவியலாத நிலையில் பொதுப் பரிந்துரையாக இறவைப் பயிருக்கு ஏக்கருக்கு யு+ரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 16 கிலோ இடலாம். 


மானாவாரி எனில் முறையே 11 கிலோ, 62 கிலோ மற்றம் 8 கிலோ இடவேண்டும். சுண்ணாம்பு மற்றம் கந்தகச் சத்துக்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 கிலோ ஜிப்சம் அடியுரமாக இட வேண்டும்.

 

உயிர் உரங்கள்


விதைநேர்த்தி செய்யாத போது, ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை ஏக்கருக்கு தலா நான்கு பொட்டலங்கள் (800 கிராம்) வீதம் 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் இடவும் அல்லது ஏக்கருக்கு தலா 200 மி.லி. ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா திரவ நுண்ணுயிர் உரங்களை ஒரு லிட்டர் நீரில் கலந்து அதனை 10 கிலோ நன்கு தூள் செய்யப்பட்ட மட்கிய தொழுஉரத்துடன் கலந்து வயலில் சீராகத் தூவவும்.

 

களைக் கட்டுப்பாடு


நிலக்கடலையை விதைத்தவுடன் நிலத்தில் ஈரம் இருக்கும் நிலையில் களை முளைக்கும்முன் தெளிக்கும் களைக்கொல்லிகளான புளுகுளோரலின் 800 மி.லி., பென்டிமெத்தலின் 30 இ.சி. 1.3 லிட்டர், ஆக்சிபுளுர்பென் 100 கிராம், அலாக்குளோர் 800 மி.லி. ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு தெளித்துக் களைகளைக் கட்டுப்படுத்தலாம். 


களை முளைக்கும்முன் தெளிக்க வேண்டிய களைக்கொல்லியைத் தெளிக்காத நிலையில், களைகளைப் பொறுத்து விதைத்த 20-25ம் நாள் களை முளைத்த பின்னர் தெளிக்கும் களைக்கொல்லிகளான இமாசிதபைர் 300 மி.லி., குயிசலோபாப் ஈத்தைல் 5 இ.சி. ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 


களைக்கொல்லி தெளிக்கவில்லை எனில் விதைத்த 20ம் நாளிலும் 45ம் நாளிலும் ஆட்களை வைத்துக் கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கும்போது வயலில் ஈரம் இருப்பதும், கைத்தெளிப்பான் பயன்படுத்துகையில் தட்டைவிசிறித் தெளிப்புமுனையைப் பயன்படுத்துவதும், வயலில் பின்னோக்கி நடந்துசெல்வதும் இன்றியமையாதனவாகும்.

 

மண் அணைத்து ஜிப்சம் இடுதல்


நன்கு முதிர்ச்சியான பொக்கற்ற காய்களை பெறுவதற்கும், எண்ணெய் சத்து மிக்க நிலக்கடலையினை பெறுவதற்கும் 45வது நாள் களை கொத்தி ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இதானல் விழுதுகள் நன்கு மண்ணுக்குள் இறங்கி நிலக்கடலை மகசூல் கூடுதலாக கிடைக்கும்.

 

எனவே புதுக்கோட்டை மாவட்ட நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பங்களை முறையாகக் கடைப்பிடித்து நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெறுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க....


குடைமிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் அளவில்லா லாபம் பெறுவது எப்படி?


நிலக்கடலையில் விதை நேர்த்தி மற்றும் ஊட்டச்சத்து நிர்வாகம்!!


மானாவாரி நிலக்கடலையில் தண்டழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments