தமிழக பட்ஜெட் 2022-23 தமிழக அரசின் 2022-23ம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம்!!
தமிழக பட்ஜெட் 2022-23
தமிழக அரசின் 2022-23ம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள்:
கால்நடை பராமரிப்பு
வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு 1,314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனம்
தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங்களின் இருப்பிடங்களாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, லண்டன் க்யூபூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்து தரப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும். இந்நிதியத்தின் மூலம், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டப்படும்.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் “வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை” அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு,முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.
வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும்.
அணிநிழல் காடுகளும், எழில்மிகு சூழல் சுற்றுலா தலங்களும் நிறைந்தது தமிழ்நாடு. வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை (Eco-Tourism) ஊக்குவிப்பது அரசின் கொள்கையாகும். இதன் அடிப்படையில், சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
தங்கும் இடங்கள், வனங்களைப் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாய் அப்பகுதியின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படும்.
இம்மதிப்பீடுகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலநிலை
வானிலையைத் துல்லியமாகக் கணிக்க, பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளது.
பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் (super computers) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.
ஊரக வளர்ச்சித் துறை
கட்டமைப்புப் பற்றாக்குறையை நிறைவு செய்து, கிராமங்களை பன்முக வளர்ச்சியடையச் செய்வது, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்– II ன் குறிக்கோளாகும். வரும் ஆண்டில், 1,455 கோடி ரூபாய் செலவில் 2,657 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசின் முன்னோடித் திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை தற்காலத்திய தொழில்நுட்ப பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப, திறன்மிகு சுய உதவிக் குழுக்களாக (Smart SHG) மேம்படுத்த முன்னோடி பயிற்சித் திட்டமாக (pilot training basis)மதுரையில் தொடங்கப்படும். தமது முன்னேற்றத்துடன் தாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பங்காற்றும் வகையில் சுய உதவிக் குழுக்களை மெருகேற்றிட பயிற்சி வழங்கப்படும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாயும், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 705 கோடி ரூபாயும், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்திற்கு 636 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 26,647.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை
பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.2,531 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு ரூ.9,773 கோடி மதிப்பீட்டில் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 10,76,096 குறு,சிறு விவசாயிகளுக்கு ரூ.7,428 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும். இம்மதிப்பீட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.13,176.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாசனம்
நடப்பாண்டில்,கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித் தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, மதிப்பீடுகளில் 2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சிறப்பாக மேலாண்மை செய்வதற்காகவும், பாசனத்திற்காக நீரை தங்குதடையின்றி வழங்குவதற்காகவும், 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
சாத்தனூர், சோலையார், மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும், அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைமேம்படுத்தவும் இரண்டாம் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகவங்கி மற்றும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 1,064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எரிசக்தித் துறை
இலவச வேளாண் மின் இணைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து ஒரே ஆண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததன்படி, இதுவரை 75,825 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இணைப்புகளும் இந் நிதியாண்டிற்குள் வழங்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
விவசாயிகளையும் விவசாயத்தையும் ஊக்குவிக விவசாயிகளுக்கு 8 வகை மானியம்!
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் ரூ.2000 வழங்கும் அரசு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...