டிரம் சீடர் கருவியை பயன்படுத்தி லாபம் பெறலாம்!! 106வது நாளிலேயே நெல் அறுவடைக்கு தயார்..!!



டிரம் சீடர் கருவியை பயன்படுத்தி லாபம் பெறலாம்!! 106வது நாளிலேயே நெல் அறுவடைக்கு தயார்..!!


டிரம் சீடர் கருவியை பயன்படுத்தி சாதித்த விவசாயி!!

விருதுநகரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தேன். லாபம் இல்லாததால் மதுரை சின்ன மாங்குளத்தில் தாத்தாவின் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். மற்ற சாகுபடியை விட நேரடி நெல் விதைப்பே லாபம் என்பதை உணர்ந்துள்ளேன் என்கிறார் விவசாயி பசீர். தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: நெல்லை நாற்றாங்காலில் பக்குவமாக வளர்க்க வேண்டும். 25 நாட்கள் கழித்து அவற்றை பிடுங்கி வயலில் நட வேண்டும். நாற்றாங்கால் தயாரிக்க, வளர்க்க, பிடுங்கி நடுவதற்கு குறைந்தது ரூ.8000 வரை செலவாகும். இந்த செலவை குறைப்பது தான் சிக்கனத்தின் முதல் வழி என்பதை புரிந்து கொண்டேன்.


முதலில் 'டிரம் சீடர்' கருவியை வாடகைக்கு எடுத்தேன். ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 வாடகை. ஏக்கருக்கு 3 மணி நேரத்தில் இந்த கருவியின் மூலம் நெல்லை நேரடியாக வயலில் விதைக்கலாம். இதன் விலையே ரூ.5000 என்பதால் சொந்தமாக வாங்கி விட்டேன்

ஒவ்வொரு முறை நடும் போதும் வாடகை கட்ட வேண்டியதில்லை. டிரம் சீடர் கருவியில் உள்ள பிளாஸ்டிக் டப்பாக்களில் அரை கிலோ அளவுக்கு விதைகளை நிரப்புவேன். ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 கிலோ விதைகள் போதும். பின்னர் வயலில் கருவியை இறக்கி உருட்டிக் கொண்டே செல்ல வேண்டியது தான்


ஒரு குழியில் இரண்டு விதைகள் வரை விழும். சன்னரக விதையாக இருந்தால் அடுத்தடுத்து உள்ள ஓட்டைகளை அடைத்து விதைகள் குறைவாக விழும் படி சரிசெய்ய வேண்டும். அதன் பின் 15வது நாளில் களைக்கொல்லி மருந்தை தெளிப்பேன். அடுத்து 10 நாட்கள் கழித்து களைகளை மிதித்து விட்டால் போதும். இதற்கு மட்டும் ஆட்கள் கூலிக்கு தேவைப்படுவர். விதைநெல் நேரடியாக வயலில் விழுவதால் சீக்கிரமே வேர்பிடித்து விடும். நாற்று அப்படியில்லை. வேர் பிடிக்க கொஞ்சம் காலம் ஆகும்.


இந்த முறையில் ஜெ.சி.எல். நெல் ரகத்தை பயிரிட்டேன். இது 130 நாட்களில் அறுவடையாகும். மற்றவர்கள் நாற்று நட்டு 130 நாளில் அறுவடை செய்தனர். நேரடியாக விதைத்ததால் 106வது நாளிலேயே நெல் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஏக்கருக்கு 38 மூடை கிடைத்ததும் லாபமாக இருந்தது, என்றார்


தொடர்புக்கு: 91503 93918. நெல் சாகுபடியில் நடவு முறையை நாம் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வந்தாலும் அதிகமான நீர்த்தேவை, நடவுக்குத் தேவையான அதிக கூலி ஆட்கள் மற்றும் வயலைப் பதப்படுத்துவதற்கான அதிக சக்தி போன்ற காரணங்களால் சமீப காலமாக பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் சாகுபடி செய்வதையே விரும்புகின்றனர். 


மேலும் நடவு நெல் சாகுபடி முறையில் வயலில் நீரைத்தேக்கி வைப்பதற்காக அதிகமாகத் தொழியடிப்பதின் காரணமாக மண்ணின் கட்டமைப்பு சிதைக்கப்படுவதோடு மட்டுமின்றி மேல் மற்றும் அடிமண் இறுக்கத்திற்கும் வழிவகை செய்கிறது. இதனால் நெல்லிற்குப் பிறகு சாகுபடி செய்யப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாகக் குறைகிறது. எனவே நேரடி நெல் விதைப்பு முறையானது, நடவு நெல் சாகுபடிக்கு ஒரு சிறந்த மாற்று முறையாகும்.

தமிழ்நாட்டில் தற்பொழுது பருவமழை பரவலாக தொடங்கியுள்ள சூழ்நிலையில் விவசாய பெருங்குடி மக்கள் புரட்டாசி பட்டத்தில் நேரடி நெல் விதைப்பையே தேர்வு செய்து மானாவாரியில் பயிரிடுகின்றனர். பெரும்பான்மையான விவசாயிகள் புரட்டாசி பட்டத்தில் நெல்லை சாகுபடி செய்வதற்கு டிராக்டர் இயந்திரம் கொண்டும், நாட்டுக்கலப்பையைக் கொண்டும் விதைப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு விதைப்பு செய்வதற்கு கால்நடைகள் மற்றும் கூலித் தொழிலாளர்களையே பெரும்பாலும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது


மேலும் கால்நடைகள் மற்றும் கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக காலம் தாழ்த்திப் பயிர் செய்வதால் நெல்லை வறட்சி தாக்கும் சூழ்நிலை உருவாவதுடன், மகசூல் குறைவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது


இம்முறையில் நெல்லை சாகுபடி செய்வதால் அதிகமான விதைகள் தேவைப்படுவதோடு மட்டுமின்றி, முறையற்ற பயிர் இடைவெளியின் காரணமாக உழவியல் நடைமுறைகளை சுலபமாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக இருப்பதில்லை. மேலும் அதிகமான பயிர்நெருக்கத்தின் காரணமாக பயிர்களுக்கிடையே நீர், உரம் மற்றும் சூரிய ஒளிக்கான போட்டி ஏற்பட்டு, மகசூல் இழப்பை உண்டாக்குகிறது.

மேற்கூறிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செட்டிநாட்டில் நேரடி நெல் விதைக்கும் கருவி மூலம் பயிர் செய்வது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த விதைப்புக்கருவியின் மூலம் குறைந்த செலவில், குறைந்த வேலையாட்களைக் கொண்டு ஓரு ஏக்கர் நிலத்தை 45 நிமிடங்களில் விதைப்பு செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.500/- வீதம் மிச்சப்படுத்தலாம். 


இக்கருவியைக் கொண்டு பயிர் செய்யும் போது சுமார் 40 மூட்டை விதைகளை நாம் மிச்சப்படுத்த முடியும். இக்கருவியைக் கொண்டு விதைக்கும் போது பயிர்களுக்கிடையே சரியான இடைவெளி (25 x10 செ.மீ.) பராமரிக்கப்படுவதால் பயிர் போட்டியைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பயிர்களுக்கு சீரான விகிதத்தில் சத்துகள் கிடைக்க வழிவகை செய்வதுடன், அதிக மகசூல் கிடைக்கவும் உதவுகின்றது. இம்முறையால் வயலில் இருந்து குறைந்த மீத்தேன் வாயு வெளியீடு, குறைந்த வேலையாட்கள் தேவை மற்றும் பயிர்கள் 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்குத் தயாராகி நடவுப் பயிரைக் காட்டிலும் அதிக மகசூலைத் தருகிறது.

Post a Comment

0 Comments