தழை கொத்தமல்லி சாகுபடி செய்வது எப்படி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள்!!



தழை கொத்தமல்லி சாகுபடி செய்வது எப்படி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள்!!


கொத்தமல்லி ஒரு முக்கியமான வாசனைப்பயிர். ஏபியேசியே என்னும் தாவர குடும்பதை சார்ந்தது. கொத்தமல்லியின் தாயகம் மத்திய தரை கடல் பகுதி ஆகும். கொத்தமல்லி நீண்ட கிளைகளை கொண்ட ஒரு பருவ தாவரம். இதன் உயரம் சுமார் 80 செ.மீ. முதல் 100 செ.மீ வரை இருக்கும். முழு தாவரமும் வாசனை பயிராகும்.


கொத்தமல்லி இலை வாசனை எண்ணெய் எடுக்கவும், துவையல் செய்யவும் பயன்படுத்தபடுகிறது. கொத்தமல்லி இலை சாலட், சூப் மற்றும் ஊறுகாய் செய்ய பயன்படுத்தபடுகின்றன. தென்மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்கா, ஐரோப்பாவின் வடகிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கொத்தமல்லி அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.



உலகில் தழை கொத்தமல்லியானது கிளின்ட்ரோ, சைனீஷ் பார்சீலி, மெக்ஸிகன் பார்சீலி மற்றும் ஜப்பான் பார்சீலி என்றும் அழைக்கப்படுகிறது. 100 கிராம் இலை கொத்தமல்லியில் உள்ள ஊட்டச்சத்து விபரமானது ஆற்றல் (100 கி.ஜூ), ஈரப்பதம் (87°), கார்போஹைட்ரேட் (5-6°), நார் சத்து (27°), கொழுப்பு (0.6°), புரதம் (3.3°), வைட்டமின் ஏ (37.8°), வைட்டமின் சி (45°) கால்சியம் (0.14°), பாஸ்பரஸ் (0.06°) மற்றும் இரும்புசத்து (0.01°) ஆகும்.


மத்திய கிழக்கு பகுதியில் இலையானது ஊறுகாய், கறி மற்றும் சட்னி தயாரிக்க அதிகளவில் பயன்படுகிறது. கொத்தமல்லி இலைகள் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதனுடைய தழை மகசூலை அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


மண் மற்றும் காலநிலை


நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். கொத்தமல்லி விதை, முளைத்து வளர்வதற்கு அதிக அளவாக 30°C குறைந்த அளவாக 10°C இருத்தல் வேண்டும். அதிக மழை மற்றும் வெப்பம், நோய் மற்றும் பூச்சிகள் அதிகளவில் தாக்குவதற்கான சூழலை உண்டாக்கும். இலை உற்பத்திக்காகப் பயிரிடப்படும் கொத்தமல்லி, மழை மற்றும் கோடை காலங்களில் பயிரிட ஏற்றது அல்ல.


இத்தொழில்நுட்பத்தில் கோடை பருவத்தில் (மார்ச் – ஏப்ரல்) இலை சாகுபடிக்கு உகந்த கோ (சி.ஆர் )-4 இரகத்தை பயிர் செய்தால் அதிக இலை மகசூலும் (5500-6000 கிலோ/ஹெக்டர்) மற்றும் அதிக வரவு செலவு விகிதமும் (14.63) கிடைக்கும். கோடை காலத்தில் நிழல் வலைக் கூடாரத்தின் வெப்ப நிலையானது வெளியிலிருக்கும் வெப்பநிலையை விட 5°C குறைவாக இருப்பதோடு, ஈரப்பதமும் அதிகமாக இருக்கும்.



இச்சூழ்நிலையானது கொத்தமல்லி கோடையில் பயிர் செய்வதற்கு ஏற்ற கால நிலையை உருவாக்கி தருவதால் இலை மகசூல் அதிகரித்தது. நிழல் வகைக் கூடாரங்களில் தழை கொத்தமல்லி சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.


நிலம் தயாரித்தல்


நிலத்தை நான்கு அல்லது ஐந்து முறை நன்கு உழுது பயன்படுத்தவேண்டும் பின் நிலத்தை சமப்படுத்தி வாய்க்கால் அமைக்க வேண்டும்.


விதை அளவு


10-12 கிலோ, எக்டருக்கு


விதை முன் நேர்த்தி


விதைகளை விதைப்பதற்கு முன் அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரியை எக்டருக்கு 600 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். வாடல் நோயைக் கட்டுபடுத்த டிரைகோடெர்மா விரிடி என்ற பூஞ்சாண நுண்ணுயிரிக் கலவையினை, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.


விதைத்தல்


விதைபதற்கு முன் விதிகளை கையினால் தேய்த்து இரண்டாக உடைத்து பின்பு தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து விதைப்பதன் மூலம் முளைப்பு திறனை அதிகரிக்கலாம். கொத்தமல்லி விதைகளை பாத்திகளில் நேர்க்கோட்டில் வரிசையாக விதைத்தல் வேண்டும். விதைகளை 2.5 செ.மீ ஆழத்தில் 20×15 செ.மீ இடைவளியில் விதைக்க வேண்டும்.



உர மேலாண்மை


இயற்கை உரம் மற்றும் இரசாயன உரத்தை நிலத்தில் இடுவதற்கு முன்பாக மண் பரிசோதனை செய்து உரம் இடுதல் நன்மை பயக்கும். பொதுவாக மக்கிய தொழு உரத்தை கடைசி உழவிற்கு முன்னர் இட வேண்டும். அப்பொழுது தான் அங்கக உரங்கள் மண்ணுடன் கலந்து நல்ல பயனை அளிக்கும்.


எக்டருக்கு 10 டன் தொழுஉரத்தை கடைசி உழவின்போது இடவேண்டும். மேலும் 10 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல்சத்து என்ற அளவிலான இரசாயன உரத்தை அடிவுரமாக இடவேண்டும். மேலுரமாக எக்டருக்கு 10 கிலோ தழைச்சத்தினை விதைத்த 30 நாட்கள் கழித்து இட வேண்டும்.


நீர் பாய்ச்சுதல்


விதைத்தவுடன் முதல் பாசனமும், விதைத்த மூன்றாம் நாள் உயிர் பாசனமும் அதனை தொடர்ந்து 7-10 நாட்கள் இடைவேளியுலும் நீர் பாய்ச்ச வேண்டும்.


பின்செய் நேர்த்தி


களைகள் வளர்வதற்கு முன் ஃப்ளுகள்ளோராலின் கலைக்கொல்லியை 700 மில்லி எடுத்து 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப, குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை களை எடுக்க வேண்டும். அதாவது விதைத்த ஆரம்ப கட்டத்தில் 30 நாட்களுக்குள், களைகள் செடிகளை மூடா வண்ணம், சுத்தமாக அப்புறபடுத்தி கவனமாக பார்த்து கொள்வதன்மூலம் நல்ல மகசூலை பெறலாம்.


பயிர் பாதுகாப்பு

 

பூச்சி தாக்குதல்


அசுவினி, செதில் பூச்சி மற்றும் மாவுபூச்சி போன்றவற்றின் சேதத்தை கட்டுபடுத்த மீத்தைல் டைமெட்டான் 25 இ.சி . மருந்து அல்லது டைமெதோயேட் 30 இ.சி. மருந்தினை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.



சாம்பல் நோய்


இதனை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு நனையும் கந்தகத் தூளை 1 கிலோ அல்லது டினோகேப் 250 மில்லி பூஞ்சாண மருந்தினை நோயின் ஆரம்ப அறிகுறி தென்படும் போது தெளிக்க வேண்டும்.


அறுவடை மற்றும் மகசூல்


 இலைகளுக்கு பயன்படுத்தபடும் கொத்தமல்லியை விதைத்த 40-45 நாட்களில் அறுவடை செய்யலாம். இலை மகசூல் 6-7 டன்கள்/எக்டர்.


கட்டுரை ஆசிரியர்கள்


ஜெ.சுந்தரம், சி.க.நிவேதா மற்றும் இரா.அருண்குமார், உதவிப் பேராசிரியர்கள், எஸ்.ஆர்.எஸ்.வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம்-624710,

மின்னஞ்சல்: nivedhanive05407@gmail.com


மேலும் படிக்க....


பயறு வகைப் பயிர்களில் மகசூல் அதிகரிப்புக்கு விவசாயிகள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள்!!


வாழை இலை மூலம் அதிக வருவாய் வாழை விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருப்பு!!


உருளைக்கிழங்கு, தக்காளி வளர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! நோய் மேலாண்மை!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......


வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

 

 

Post a Comment

0 Comments