ஒரு ஏக்கரில் 92 மூட்டை நெல் விளைச்சல்!! திருந்திய நெல் சாகுபடி மூலம் சாகுபடி வருவாயை பெருக்குவது எப்படி?



ஒரு ஏக்கரில் 92 மூட்டை நெல் விளைச்சல்!! திருந்திய நெல் சாகுபடி மூலம் சாகுபடி வருவாயை பெருக்குவது எப்படி? 

 

திருந்திய நெல் சாகுபடி என்பது SRI என்பதன் விரிவாக்கம் ஆகும். இது நெல்லி எனும் தாவரத்தின் முழு திறனையும் வெளிக்கொணரும் ஒரு சாகுபடி முறையாகும். பொதுவாக இயற்கை வழி விவசாயம் செய்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இரண்டு, ஒன்று சாகுபடி செலவில் அதிகம்.

 

இரண்டு கிடைக்கின்ற மகசூல் அளவு சராசரியாக இருப்பது. இதனால், ஏனைய சாகுபடி முறைகளுடன் ஒப்பிடும் போது இயற்கைவழி சாகுபடியில் தாக்குப்பிடிப்பது சிரமம். ஆனால் திருந்திய நெல் சாகுபடி முறையானது விவசாயிகளுக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

 


ஏனெனில் இம்முறையில் கிடைக்கும் நெல் மகசூல் வேறு எந்த முறைகளைக் காட்டிலும் அதிகம் என்பதால் சாகுபடியாளர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

 

ஹென்றி டி லாலுனே என்ற பிரஞ்சு கத்தோலிக்க பாரதியாரால் 1983ல் மடகாஸ்கரில் அறிமுகம் செய்யப்பட்டு இன்று உலகமெங்கும் திருந்திய நெல் சாகுபடி முறை என்று பின்பற்றப்பட்டு வருகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மகசூலை அள்ளித் தருவதுதான் திருந்திய நெல் சாகுபடி முறையின் சிறப்பாகும்.

 

இந்தியாவில் சராசரியாக ஒரு எக்டருக்கு மூன்று டன் நெல் விளைவிக்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒரு ஏக்கருக்கு 8 டன் விளைவிக்கப்படுகிறதென்றால், இம்முறையின் சிறப்பை யாவரும் அறிந்து கொள்ள முடியும்.

 


சாகுபடி முறையினை பின்பற்றி தெலுங்கானாவை சார்ந்த இயற்கை முன்னோடி விவசாயி நாகரத்தினம் நாயுடு ஒரு ஏக்கரில் 92 மூட்டை நெல் விளைச்சல் எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இயற்கை முறையில் திருந்திய நெல் சாகுபடி முறையினை பின்பற்றி நாகரத்தினம் நாயுடு பெற்றுள்ள விருதுகளும், பல்வேறு நாட்டினரும் அவரது பண்ணையைப் பார்வையிட்டு செல்வதும் இம்முறைக்காண அங்கீகாரமாகும்.

 

வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி, அறிவியல் பூர்வமான இடைவெளி, குறைவான விதை நெல், இளவயது நாற்றுகள், குறைந்த அளவு நீர் பயன்பாடு, களைகளை உரமாக மாற்றி பயன்படுத்துதல் மற்றும் இயற்கை வழியில் ஊட்டச்சத்துக்களை அளித்தல் போன்றவை திருந்திய நெல் சாகுபடி முறையின் அடிப்படையாகும்.

 

நெல் தாவரத்தின் முழு திறனையும் வெளிக்கொணரும் வகையில் சாகுபடியை அமைத்து பயன்படுத்துவது திருந்திய நெல் சாகுபடியும் சிறப்பாகும். நெல் பயிரின் முழுத் திறனும் வெளிப்படும் போது மகசூல் அதிகரிக்கும், மகசூல் அதிகரிக்கும் போது விவசாயிகள் வருமானமும் அதிகரிக்கும் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய முடியும். நெல்லின் முழுத்திறமையும் வெளிப்பட வேண்டுமாயின் சில குறிக்கோள்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

 

 

முதலில் நெல் தாவரம் அதிகப்படியான பக்க கிளைகளை பெற்று இருக்க வேண்டும். இரண்டாவதாக பக்கக் கிளைகள் அதிகப்படியான வீரிய கிளைகளை கொண்டிருக்க வேண்டும். மூன்றாவதாக கதிர்கள் அதிக நீளமாகவும் அதிக மணிகளை கொண்டதாகவும் இருத்தல் அவசியம் நெல்மணிகள் அதிக எடையுடன் இருத்தல் நலம்.

 


இவற்றுக்கெல்லாம் மேலாக நெற்பயிரின் வேர்கள் நாலாபுறமும் பரவி இருக்க வேண்டும் அத்துடன் ஆரோக்கிய வளர்ச்சி கொண்டதாகவும் இருப்பது அவசியம். இக்குறிக்கோள்களை அடைவதே திருந்திய நெல் சாகுபடியின் உட்கூறு ஆகும். திருந்திய நெல் சாகுபடி முறை வெற்றிகரமாக செயல்படுவதில் சில அம்சங்கள் உள்ளன.

 

அவற்றுள் முக்கியமானவை பொருத்தமான நிலத்தினை தேர்வு செய்தல், நாற்றங்கால் தயாரித்தல், கிளை செடிகள் உருவாகும் பருவம், நடவு வயலை தயார் செய்தல், களை நிர்வாகம், நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் தடுப்பு ஆகும். இந்த விஷயங்களில் சிறப்பாக கவனம் செலுத்தினால், சிறப்பு நெல் சாகுபடி முறையில் உன்னத நிலையினை அடையலாம்.

 

பொருத்தமான நிலம் தேர்வு

 

திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்வதற்கான நிலம் ஏற்புடையதாயிருத்தல் அவசியம். பொருத்தமான நிலம் என்பது உவர் தன்மை இல்லாமலும், மேடுபள்ளம் இல்லாத சமமான நிலமாகவும், வளமான மண்ணாகவும் இருப்பது சிறப்பு.

 

திருந்திய நெல் சாகுபடி முறைக்கு உவர்நிலம் பொருத்தமற்றது. உவர் நிலங்களில் நீர் அதிகம் தேக்கினால் மட்டுமே நெல் சாகுபடி செய்ய முடியும், ஆனால் திருந்திய நெல் சாகுபடி முறையில் நீரை உடனே வடிந்து விடுவதால் திருந்திய நெல் சாகுபடி முறைக்கு பொருத்தமற்றது.

 

நிலம் சமமாக மேடு பள்ளம் என்று இருப்பின் பாசன நீர் சமமாகப் பரவுவதற்கும் வடிப்பதற்கு ஏதுவாகவும் இருக்கும். எனவே சமமான வயல் திருந்திய நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்புடையது. மேலும், திருந்திய நெல் சாகுபடி முறை ரசாயன தவிர்த்த, இயற்கை இடுபொருட்களை மூலம் நுண்ணூட்டங்கள் இடுவதற்கு ஏற்றது.

 

நுண்ணூட்டங்கள் நிரம்பிய மண் பயிருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை தயார் நிலையில் கொண்டிருப்பதால் நெல்பயிர் ஆரோக்கியமாகவும், நோய் தாக்கம் இல்லாமலும் வளரும். எனவே மண்ணை வளமாக்க ஆரம்பத்திலிருந்தே பின்வரும் முறைகளில் ஏதேனும் இரண்டை பின்பற்றுவது நலம்.

 

 

திருந்திய நெல் சாகுபடிக்கு ஏற்றார் போல் வளமாக்கிட குளத்து வண்டல் இடுவது நலம். இது மண்ணின் ஈரப்பதத்தை நிலை நிறுத்துவதால், சிறந்த மகசூல் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

 

நன்கு மக்கிய மாட்டு சாணம் சிறந்த முறையில் மண் வளத்தை பெருக்க உதவும். மட்கிய மாட்டு சாணம் சிறந்த தரம் உடையதாய் இருத்தல் அவசியம். மக்கிய தொழு உரம் பழுப்பு முதல் கருப்பு நிறமாகவும் மிருதுவாகவும், மண்வாசனையுடன் இருப்பதை நிலைநிறுத்தும் பண்பு அதிகமாகக் கொண்டிருக்கும்.

 

மண்ணின் வளத்தையும், உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதில் பசுந்தாள் உரம் சிறப்பான பங்காற்றுகிறது. சணப்பு, தக்கைப்பூண்டு, போன்றவற்றை 45 நாட்கள் வரை வளர்த்த பின்னர் வெட்டி முடக்கி விட்டு, பத்து நாட்கள் கழித்து உழவு செய்தால் தரமான பசுந்தாள் உரம் ஆகும்.

 

பசுந்தாளினை மடக்கி உழுதால் அது தரமான உரம் ஆகாது மற்றும் மண்ணை வளமாக்காது. ஏனெனில் அது உயிர்வளியற்ற செரிமானமாகும் (Anaerobic Digestion). மாறாக பசுந்தாளினை வெட்டி முடக்கி விட்டு 10 நாட்கள் கழித்த பின்னர் நிலத்தை உழவு செய்தால் அது தரமான மண்ணை வளமாக்கும் உரமாகும்.

 


ஏனெனில் அது உயிர்வளி செரிமானமாகும் (Aerobic digestion). பசுந்தாள் உரமிடுதலில் தபோல்கர் முறை சிறப்பு பெயர் பெற்றது. தபபோல்கர் முறையில் ஒரு விதையிலை தாவர விதைகள் (Monocot), இருவிதையிலை தாவர விதைகள் (Dicot) எண்ணெய் வித்துகள், பசுந்தாள் விதைகள், வாசனை மசாலா விதைகளை வளர்த்து பசுந்தாள் உரமாக மாற்றுவது.

 

இதுதவிர மண்ணை வளமாக்க ஆட்டுக்கிடை இடலாம். இரவில் அடைக்கப்படும் ஆடுகளின் சிறுநீர் மற்றும் சாணம் மண்ணை நன்கு வளமாக்கும்.

 

தகவல்  வெளியீடு

 

சி.சக்திவேல், முதுகலை வேளாண்மை மாணவர், மின்னஞ்சல் : duraisakthivel999@gmail.com, கைபேசி எண் : 77087 27250,

 

ச.பாலமுருகன், முனைவர் பட்ட மாணவர், (பூச்சியியல்துறை) மின்னஞ்சல் : sbala512945@gmail.com, கைபேசி எண் : 80722 10944,

 

அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் மற்றும் ஆ.விந்தியா, இளங்கலை வேளாண்மை மாணவி, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சை.

 

 

மேலும் படிக்க....


நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான நெல் விதை உற்பத்திக்கான வழிமுறைகள்!!


நெற்பயரில் குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்!!


ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்! வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.


Post a Comment

0 Comments