பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேளாண் துறை ஆலோசனை!!
புதுக்கோட்டை
மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களில் பூச்சிக்கொல்லி தெளிக்கும்
போது கவனத்துடன் செயல் பட வேண்டும் எனவும், பூச்சிக்கொல்லிகளைத் தேவையான அளவு பயன்படுத்திடவேண்டும்
எனவும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
மாவட்டத்தில் நெல் உள்ளிட்ட வேளாண்மை மற்றும் தோட்டக் கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி
செய்யப்படுகின்றன. இப்பயிர்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்திட
விவசாயிகள் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும் சூழ்நிலை காணப்படுகிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பல்வேறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்துப் பல்வேறபயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பரிந்துரைக்கப்படும் அளவிற்கு மேற்பட்டு பூச்சிக்கொல்லிகளைப்
பயன்படுத்துவதாலும், பரிந்துரைக்கப்படாத பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதாலும்,
தானியப் பயிர்களிலும் காய்கறிப் பயிர்களிலும் எஞ்சிய நஞ்சு தங்கி விடுவதற்கான வாய்ப்பு
ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பயன்படுத்துவோர்க்கும் அதிக ளவில் தீங்கு விளைவிக்கிறது
என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், விவசாயிகள்
பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இயற்கை ஒட்டுண்ணிகள், விளக்குப்
பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, உழவியல் முறைகள், உயிரியல் காரணிகள் ஆகியவற்றைக் கொண்டு
கட்டுப்படுத்துவதன் மூலம் இரசாயனப் பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டினை வெகுவாகக் குறைக்கலாம்.
பூச்சிக் கொல்லிகளைப்
பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்
1. பூச்சி,நோய்க்
கட்டுப்பாட்டிற்குப் பெரும்பாலும் இரசாயன மருந்துகள் மட்டுமே தொடர்ந்து தேவைக்கு அதிகமாகப்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இரசாயன மருந்துகளைத் தெளிக்கும் போது தகுந்த பாதுகாப்பு
முறைகளைக் கையாள வில்லையெனில் அதனைத் தெளிப்பவர்களுக்கும் பல்வேறு தீய விளைவுகள் உண்டாகும்.
எனவே, உரிய பாதுகாப்பு முறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
2. தீமை செய்யும்
பூச்சிகளின் எண்ணிக்கையானது பொருளாதாரச் சேத நிலையை அடைந்தால் மட்டுமே இரசாயனப் பூச்சிக்
கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும்.
3. இரசாயனப் பூச்சிக்
கொல்லிகளைப் பரிந்துரை செய்யப்படும் அளவு நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
4. கைத்தெளிப்பான்
எனில் ஏக்கருக்கு 200 லிட்டர், விசைத் தெளிப்பான் எனில் ஏக்கருக்கு 60 லிட்டர் நீர்
பயன்படுத்த வேண்டும்.
5. மருந்து தெளிப்பவர்
கையுறை, காலுறை, கண்ணாடி, முகக் கவசம் இவற்றுடன் முழுக்கைச் சட்டையும் கண்டிப்பாக அணிந்து
கொண்டு மருந்து தெளிக்க வேண்டும். இதனால் 99 சதவீதம் மருந்தானது உடலின் மேல் படுவது
தவிர்க்கப்படும்.
6. பூச்சிக் கொல்லிக்
கொள்கலன் மேல் ஒட்டப்பட்டுள்ள சிட்டையில் குறிப்பிட்டவற்றை நன்கு படித்து அறிந்து கொள்ளவேண்டும்.
7. இரசாயனப் பூச்சிக்
கொல்லிகளைக் காலை அல்லது மாலை வேளையில் அதாவது குளிர்ச்சியான பொழுதுகளில் மட்டுமே தெளிக்கவேண்டும்.
8. மருந்தினை அளப்பதற்கும்,
கலக்குவதற்கும் கண்டிப்பாக வெறும் கைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குரிய தகுந்த கருவிகளை
மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
9. ஒரே இரசாயனப்
பூச்சிக் கொல்லியைத்தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.
10. மழை பெய்யும்
போதும், காற்று பலமாக வீசும் போதும் கண்டிப்பாகப் பூச்சிக் கொல்லி தெளிக்கக்கூடாது.
11. மருந்து தெளிக்கும்
சமயங்களில் தெளிப்பவர் சாப்பிடவோ, நீர் அருந்தவோ, புகைபிடிக்கவோ, மூக்குப்பொடி போடவோ
கூடாது.
12. மருந்து தெளிப்பவர்
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 ஏக்கருக்கு மேல் மருந்து தெளிக்கக் கூடாது.
13. மருந்து தெளித்து
முடித்த பின்னர் கைகளை சோப்பு கொண்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
14. கொள்கலனும்
அதனைக் கழுவிய நீரும் நீர் நிலைகளில் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் பயிர் சாகுபடியில் பூச்சிக் கொல்லிகளை வேளாண்மை-உழவர் நலத்துறையின் பரிந்துரையின் படி பயன்படுத்திடவும்,
சரியான பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு பூச்சிக்கொல்லிகளைப்
பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்
இராம.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
தை பட்டத்தில் உளுந்து சாகுபடி! எந்தெந்த இரகங்களுக்கு எவ்வளவு மகசூல் கிடைக்கும்?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...