உளுந்து பயிர் சாகுபடி செய்வது எப்படி? விதை நுட்ப அறிவியல் துறை பேராசிரியர் முழு விளக்கம்!!

விதை ஊன்றி  90-வது நாளில் அறுவடை செய்யும் உளுந்து பயிரில் அதிக மகசூல் பெற, விதை நுட்ப அறிவியல் துறை பேராசிரியர், விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்து உள்ளார். இது குறித்து ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் (விதை நுட்ப அறிவியல் துறை) மலர்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


உளுந்து பயிரிட உகந்த பருவம் எது?

உளுந்து குறுகிய கால பயிர். எனவே எளிதில் பயிர் செய்து அதிக லாபம் ஈட்டலாம். விதைப்பிற்கு ஆடி மற்றும் மாசி பட்டம் மிகவும் ஏற்றது.


ஊடுபயிராக உளுந்து

தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிர் செய்யப்படுவதால் உளுந்து விதைக்கு நல்ல விற்பனை வாய்ப்புள்ளது. விதை உற்பத்திக்காகத் தேர்ந்தெடுத்த நிலத்தில், அதற்கு முந்தைய பயிர் சான்று பெறாத, அதே ரகமாகவோ அல்லது வேறு ரகமாகவோ இருக்கக் கூடாது. நிலத்தில் தங்கியுள்ள விதைகள் இப்பருவத்தின் போதுதான் தோன்றி பயிர்களாக முளைத்து, கலவன்களாகத் தோன்றும் வாய்ப்பு உள்ளது.


உளுந்துக்கு ஏற்ற மண் வகை

நல்ல வடிகாலுள்ள செம்மண் மற்றும் வண்டல் மண் நிலம், திரட்சியான விதைகளைத் தரும். இனக்கலப்பைத் தவிர்க்க விதை பயிர்களை, சான்று பெறாத அதே ரகமாகவோ அல்லது வேறு ரகத்திடமிருந்தோ, 5 முதல், 10 மீட்டர் வரை விலக்கி வைத்திருக்க வேண்டும்.


எந்தமாதிரியான உரங்கள் பயன்படுத்தலாம்?

ஒரு ஏக்கர் விதைப்புக்கு, 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்தை அடியுரமாக இட்டு, எட்டு கிலோ விதையை, 45க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.


டி..பி.  உரம்

அதிக திரட்சியான காய்கள் மற்றும் கூடுதல் மகசூல் பெற டி..பி., (DAP, compost) கரைசல் தெளிக்க வேண்டும். 2.5 கிலோ டி..பி.,யை, 15 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் வடித்து தெளிந்தக் கரைசலை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, மாலை நேரத்தில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.


பிளானோஃபிக்ஸ்

பூக்கள் உதிர்வதை தடுக்க, 50 சத பூப்பின்போது லிட்டருக்கு, 4 மி.லி., அளவில் பிளானோஃபிக்ஸ் தெளிக்க வேண்டும்.


களை மேலாண்மை மற்றும் களை நீக்குதல்

விதை ஊன்றி 15 முதல் 20 நாட்களில் முதல் களை தொடங்க வேண்டும் அதன் பின்னர், பூக்கும் முன், பூக்கும் பருவம், காய்ப்பிடிப்பின்போது மற்றும் அறுவடைக்கு முன், செடி, பூ மற்றும் காய்களில் வேறுபட்ட பயிர்களைக் கண்டிப்பாக நீக்குதல் அவசியம்.


அறுவடை காலம்

காய்கள் பச்சை நிறத்திலிருந்து கறுப்பு நிறமாக மாறும் போது, அறுவடை செய்து நன்கு உலர்த்தி, மூங்கில் கழி கொண்டு அடித்து, விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன.


குறைந்த கால மற்றும் நீண்ட கால விதைகள் சேமிப்புக்கு

1. குறைந்த கால சேமிப்புக்கு, விதைகளை, 9 சதவீத ஈரப்பதத்துக்கு காயவைத்து துணிபைகளிலோ அல்லது சாக்குப்பைகளிலோ சேமிக்கலாம்.


2. நீண்ட காலம் விதைகளைச் சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை, 8 சத அளவுக்கு குறைத்து பாலித்தீன் உள்ளுறை கொண்ட பைகளில் சேமிக்கலாம்.

3. இதுபோல் விதை உற்பத்தி தொழில் நுட்பங்களைக் கையாண்டு உளுந்தில் அதிக லாபம் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post