பப்பாளி பழ மரங்கள் சாகுபடியில் உயர் விளைச்சல் ரகங்களும் விதைத் தரங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்!!



பப்பாளி பழ மரங்கள் சாகுபடியில் உயர் விளைச்சல் ரகங்களும் விதைத் தரங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்!!


ஏழைகளின் கனி என்றழைக்கப்படும் பப்பாளி, பழ வகை மரங்கள் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் இதில் விவசாயிகள் அதிகளவில் தீவிரம் காட்டி வருகின்றனர். மருத்துவ குணமிக்க பப்பாளி பழங்கள் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடலை மெருகேற்றவும் பயன்படுவதால் பப்பாளி பழங்களுக்கு பொது மக்களிடையே தேவை அதிகரித்துள்ளது. 


மாம்பழத்திற்கு பிறகு வைட்டமின் ஏ சத்துள்ள சிறந்த ஆதாரம் பப்பாளி ஆகும். இது கொலஸ்ட்ரால், சர்க்கரை மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது. அதனால் தான் மருத்துவர்களும் இதை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது பார்வையை மேம்படுத்துகிறது மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உதவுகிறது. பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்சைம் மருத்துவ குணம் கொண்டது. 



இந்த பப்பாயின் இறைச்சியை மென்படுத்துவதற்கும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும், மதுபான வகைகளில் குளிர்ச்சியை நிலைப்படுத்தவும், ஜவுளி தொழில், காகித தொழில் மற்றும் தோல் பதனிடும் தொழிலும் பயன்படுகிறது. பழுத்த பழங்கள் ஜாம், ஜெல்லி, தேன், க்ரீம் ரொட்டிகளில் பயன்படும் டுட்டிப்ருட்டி எனப் பலவகையாக பதப்படுத்தப்பட்டு பயன்படுகிறது. 


பல்வேறு பயன்பாடுகளாலும் பப்பாளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் பப்பாளி சாகுபடியினை அதிக அளவில் மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.


பப்பாளி சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் பப்பாளி பயிரில் உள்ள உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்கள் மற்றும் இரகங்களின் குணாதிசயங்களை அறிந்து, தங்கள் பகுதிக்கு ஏற்ற இரகங்களை தேர்வு செய்து, தேர்வு செய்த இரகங்களின் தரமான விதைகளைப் பெற்று, நல்ல முறையில் நாற்றுக்களை உற்பத்தி செய்து, மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்களையும் அறிந்து பயிர் செய்தல் மிகவும் அவசியம்.



தமிழ்நாட்டில் பூசா குள்ளன், பூசா ஜெயன்ட், பூசா நன்ஹா, பூசா டெலிலிசியஸ், பூசா மெஜஸ்டிக், கூர்க்ஹனி டியூ, அர்க்கா சூர்யா, அர்க்கா பிரபாத், சோலோ, வாஷிங்டன், ரான்ச்சி, தாய்வான் 785, தாய்வான் 786, கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கோ-7, கோ-8 ஆகிய பப்பாளி இரகங்களும் சப்னா (மஞ்சள் நிறம்) ரெட் லேடி (சிவப்பு நிறம்), ரெட் ராயல் (சிவப்பு நிறம்) சிந்தா (மஞ்சள் நிறம்) என வீரிய ஒட்டு ரக பப்பாளிகளும் பயிரிடப்படுகின்றன.


கூர்க் 1னி டியூ


மதுபிந்து என அழைக்கப்படும் இந்தப் பப்பாளி ரகம் இதன் பழ தன்மையாலும், சுவையாலும் அதிக அளவில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. பச்சை மஞ்சள் நிற நீண்ட வட்ட வடிவ பழ அமைப்பும், ஆரஞ்ச நிற சதைப்பற்றுடன் நல்ல சுவையும் மனமும் உடையது. இது உண்பதற்கும், பப்பாயின் எடுப்பதற்கும் உகந்தது.


பூசா குள்ளன்


இந்த ரகம் பெண் பூக்கள் மற்றும் இருபால் பூக்களை கொண்ட இரட்டை வகையாகும். செடிகள் சிறியவை மற்றும் அதிக பழங்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. பழங்கள் சராசரியாக 1.0 முதல் 2.0 கிலோ எடையுடன் நீள்வட்டவடிவில் இருக்கும். பழங்கள் தரை மேற்பரப்பில் இருந்து 25 முதல் 30 செ.மீ. வரை செடியில் வளர ஆரம்பிக்கும். 



இந்த ரகம் அடர் நடவு முறைக்கு மிகவும் ஏற்றது. இந்த ரகத்தின் பழம் பழுக்கும்போது கூழின் நிறம் மஞ்சள் நிறமாக சதைப்பற்றுடன் காணப்படும். இது ஒரு செடிக்கு 40 முதல் 50 கிலோ வரை பழ மகசூல் தரவல்லது.


பூசா ஜெயன்ட்


இந்த ரகம் பெண் பூக்கள், மற்றும் இருபால் மலர்களைக் கொண்ட இருமுனை வகையாகும். இந்த ரக பப்பாளி செடி மிகவும் வலுவானது நன்றாக வளரும் மற்றும் வலுவான காற்றை கூட தாங்கி வளர்ந்து பிழைக்க கூடிய திறன் கொண்டது. இதன் பழங்கள் சராசரியாக 2.5 முதல் 3.0 கிலோ எடையுடன் பெரிய அளவில் இருக்கும். ஒரு செடி சராசரியாக 30 முதல் 35 கிலோ வரை மகசூல் தரவல்லது. பழங்கள் பதப்படுத்தி பப்பாயின் எடுப்பதற்கு அதிகளவில் பயன்படுகிறது.


பூசா நன்ஹா


ஆண் மரங்களும், பெண் மரங்களும் தனித் தனியாக காணப்படும் டையோசியஸ் வகையைச் சார்ந்தது. இந்த ரகம் மிகவும் குள்ள வகை பப்பாளி. இதன் பழங்கள் தரை மேற்பரப்பில் இருந்து 15 முதல் 20 செ.மீ. உயரத்தில் காணப்படும். இந்த ரகம் மாடி தோட்டங்களில் பண்ணைகளில் வளர்ப்பதற்கு உகந்த ரகமாகும்.


அர்கா சூர்யா


இது சோலோ மற்றும் பிங்பிளஷ்ஸ்வீட் ஆகிய ரகங்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட கலப்பின வகையாகும். இது பெண் பூக்கள் மற்றும் இருபால் பூக்கள் கலந்து காணப்படும், கைனோடையேசியிஸ் வகை பப்பாளியாகும். இதன் பழங்கள் நடுத்தர அளவில் காணப்படும். 



ஒரு பழத்தின் எடை 500 முதல் 700 கிராம் வரை இருக்கும். பழத்தின் தோல் மஞ்சள் நிறத்திலும், சதைப்பற்று நல்ல சிவப்பு நிறத்துடனும் காணப்படும். நல்ல சதைப்பற்றுடன் காணப்படும். இதன் கூழில் கரையக்கூடிய திடப்பொருள் 13 முதல் 15 பிரிக்ஸ் வரை இருக்கும் இந்த பழம் நீண்ட காலம் சேமித்து வைக்கலாம். ஒரு செடியில் 55 முதல் 65 கிலோ வரை மகசூல் தரவல்லது.


கோ-1


இந்த ரகம் ராஞ்சி என்னும் வட இந்திய ரகத்தில் இருந்து நல்வழி தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது. மரங்கள் குட்டையாக வளரும் தன்மையும், பெண் பூக்களை மட்டும் கொண்ட டையோசியஸ் வகையாகும். பழங்கள் வட்ட வடிவமாகவும், அடிப்பகுதி தட்டையாகவும் காணப்படும். 


பழத்தில் வரிவரியாக கோடுகள் காணப்படும். பழத்தின் சதைப்பகுதி மஞ்சள் நிறத்துடன் காணப்படும். ஒரு மரம் வருடத்திற்கு சராசரியாக 80 முதல் 90 காய்கள் வரை மகசூல் தரவல்லது. இதன் காய்களில் பப்பாயின் தயாரிக்க அதிக அளவு பால் எடுக்கமுடியும். பழங்களில் பப்பாயின் வாசனை அறவே இருக்காது.


கோ-2


இது நாட்டு ரக பப்பாளியில் இருந்து தனிவழித் தேர்வு முறையில் 1979ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது பழத்திற்கும், பப்பாயின் எடுக்கவும் ஏற்ற ரகம். பழங்கள் நீண்ட முட்டை வடிவ உருவமுடையதாக இருக்கும். 


பழங்கள் ஒவ்வொன்றும் ஒன்றரை முதல் இரண்டரை கிலோ எடை இருக்கும். பழம் 75 சதவீதம் அளவு சதைப்பற்றுடன் ஆரஞ்சி நிறத்தில் காணப்படும். இதன் கரையக்கூடிய திடப்பொருளின் அளவு 11.4 முதல் 13.5 பிரிக்ஸ் வரை இருக்கும். மரம் ஒன்றுக்கும் ஒரு வருடத்தில் 60 முதல் 90 பழங்கள் வரை கிடைக்கும். 


ஒரு காயிலிருந்து 25 முதல் 30 கிராம் வரை பப்பாயின் எடுக்க முடியும். இந்த ரகத்தில் அதிகளவில் வைட்டமின் சி (50.8 மில்லி கிராம்) காணப்படும். இது ஒரு எக்டரில் 250 முதல் 300 கிலோ வரை பப்பாயின் உற்பத்தியை தரவல்லது.


கோ-3


இந்த ரகம் கோ-2 மற்றும் சோலோ ஆகிய ரகங்களை கலப்பினச்சேர்க்கை செய்து 1983ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது பெண் பூக்கள் மற்றும் இருபால் இனத்தை சேர்ந்த பூக்கள் கொண்ட கைனோடையேசியிஸ் வகை பப்பாளியாகும். பழங்கள் நடுத்தர பருமனை உடையதாக இருக்கும். 



சதைப்பற்று நல்ல சிவப்பு நிறமுடையதாக இருக்கும். உண்பதற்கு ஏற்ற ரகம். பழங்கள் இதய வடிவில் காணப்படும். 500 கிராம் முதல் 800 கிராம் வரை எடை கொண்டதாக இதன் பழங்கள் இருக்கும். மரம் ஒன்றிலிருந்து வருடத்திற்கு 90 முதல் 120 கிலோ பழங்கள் மகசூலாக கிடைக்கும்.


கோ-4


இந்த ரகம் கோ-1 மற்றும் வாஷிங்டன் ஆகிய இரு ரகங்களையும் 1983ம் கலப்பினச்சேர்க்கை செய்து உருவாக்கப்பட்ட ரகமாகும். இதன் தண்டு மற்றும் இலைக்காம்புகள் ஊதா நிறத்தில் காணப்படும். ஆண் மரங்களும், பெண் மரங்களும் தனித்தனியாக காணப்படும். டையோசியஸ் வகையைச் சார்ந்த இந்த ரகம் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மிகவும் உகந்தது. 


பழங்கள் நடுத்தர அளவில் காணப்படும். ஒரு பழம் 1.2 கிலோ முதல் 1.5 கிலோ வரை இருக்கும். பழங்களில் சதைப்பற்று நிறைந்தும் ஊதா கலந்த மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். ஒரு மரம் 80 முதல் 90 பழங்கள் வரை ஒராண்டில் மகசூல் தரவல்லது.


கோ-5


இது வாஷிங்டன் ரகத்திலிருந்து தனித்தேர்வு முறையில் உருவாக்கப்பட்ட ரகமாகும். இலைக்காம்புகள் ஊதா நிறத்தில் காணப்படும். இந்த ரகம் பப்பாயின் எடுப்பதற்கு மிகவும் ஏற்ற ரகம். பழம் ஒன்றுக்கு 14 முதல் 15 கிராம் வரை உலர்ந்த பப்பாயின் கிடைக்கும். இந்த ரகம் எல்லா பருவங்களிலும் அனைத்து வகையான மண்ணிலும் பயிரிட ஏற்றது. 


ஒரு மரம் 75 முதல் 80 கிலோ வரை பழ மகசூலை தரவல்லது. ஒரு எக்டரில் இரண்டு வருடங்களில் 1500 முதல் 1600 கிலோ வரை உலர்ந்த பப்பாயின் கிடைக்கும். ஒவ்வொரு பழமும் 1.5 முதல் 2.0 கிலோ எடை வரை இருக்கும்.


கோ-6


இந்த ரகம் பூசாஜெயன்ட் என்ற பப்பாளி இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. இது குட்டை வகை பப்பாளி நடவு செய்த 8 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். இந்த ரகம் பப்பாயின் எடுப்பதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்றது. ஒரு பழத்தில் இருந்து 7.5 கிராம் முதல் 8.0 கிராம் வரை உலர்ந்த பப்பாயின் கிடைக்கும். 


பெண் பூக்கள், ஆண் பூக்கள் தனித்தனியாக கொண்ட டையேசியஸ் வகையை சேர்ந்தது. இது மரம் ஒன்றுக்கு 80 முதல் 100 கிலோ வரை பழ மகசூல் தரவல்லது. பழங்கள் நடுத்தரமாக இளம் பச்சை நிறத்திலும், பழம் ஒன்று 2 கிலோ எடையுடனும் காணப்படும். இதன் சதைப்பற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒரு எக்டரில் இருந்து 100 கிலோ வரை உலர்ந்த பப்பாயின் கிடைக்கும்.

 

கோ-7


பெண் மரங்களும் இருபால் பூக்கள் கொண்ட மரங்களும் கொண்ட கைனோடையோசியிஸ் வகையைச் சேர்ந்த இந்த ரகம் கோ-3, பூசா டெலிஸியஸ், சிபி-75 மற்றும் கூர்க் ஹனிடியூ ஆகிய ரகங்களை இனக்கலப்பு செய்து 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒரு மரம் 112 பழங்களை உற்பத்தி செய்கிறது. 


ஒரு எக்டரில் 340 டன்கள் வரை பழ மகசூல் தரவல்லது. பழங்கள் நீள்வட்ட வடிவில் அழகாக காணப்படும். சதைப்பற்று சிவப்பு நிறத்தில் தடிமனாக அதிக அளவில் காணப்படும். இது சமவெளி பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் பயிரிட ஏற்ற ரகம்.


வாஷிங்டன்


இந்த வகை பப்பாளியில் பெண்பூக்கள் மரம் மற்றும் ஆண்பூக்கள் மரம் தனித்தனியாக காணப்படும். பழம் உண்பதற்காக பயன்படுகிறது. பழங்கள் முட்டை வட்ட வடிவில் நடுத்தர அளவில் குறைந்த விதைகளுடன் காணப்படும். பழம் பழுக்கும்போது தோல் மற்றும் சதைப்பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஒரு பழத்தின் சராசரி எடை 1.5 முதல் 2.0 கிலோ வரை இருக்கும்.


சோலோ


இது பெண் மரங்கள் தனியாகவும், ஆண் மரங்கள் தனியாகவும் காணப்படும். பழங்கள் வட்ட வடிவிலும், மேலும் பழத்தின் மீது கோடுகளும் காணப்படும். பழத்தின் சதைப்பற்று அதிகமாகவும், சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் இனிப்பாகவும் வாசனையுடனும் இருக்கும்.



ரெட் லேடீ


பெண் மரங்கள் மற்றும் இருபால் பூக்கள் உடைய மரங்களை கொண்ட இந்த ரகம் 8 முதல் 9 மாதங்களில் விளைச்சல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரகமாகும். பழங்கள் 50 முதல் 80 செ. மீ உயரத்தில் காணப்படும். மரம் ஒன்றில் 50 முதல் 80 பழங்கள் வரை காணப்படும். எக்டர் ஒன்றிற்கு 120 டன்கள் வரை மகசூல் தரவல்லது. 


இந்த பிரபலமான ரகத்தின் பழம் ஒன்று 1.5 முதல் 2.0 கிலோ எடை வரை இருக்கும். பழத்தின் சதைப்பற்று சிவப்பு நிறத்தில் தடிமனாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். இது 13% சர்க்கரை சத்தினை கொண்டுள்ளது. இந்த ரகம் பப்பாளி ரிங் ஸ்பாட் வைரஸைத் தாங்கி வளரக் கூடியது.


பப்பாளி ரகங்களைப் பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம்


முதல் வகையில் ஆண் மரங்கள் மற்றும் பெண் மரங்கள் தனித்தனியே காணப்படும். இவ்வகையில் பழங்கள் பொதுவாக மஞ்சள் நிற சதைப்பற்றை கொண்டுள்ளதாக இருக்கும். இரண்டாவது வகையில் பெண் மரங்களும், இருபால் பூக்கள் கொண்ட மரங்களும் காணப்படும். 


முதல் வகையில் பெண் மரங்கள் சரியான முறையில் மகரந்தச் சேர்க்கைக்கு உட்பட 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் என்ற விகிதத்தில் ஆண் மரங்கள் தோட்டம் முழுவதும் பரவலாக உள்ளவாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்.


சாகுபடிக் குறிப்புகள்


நிலம்


பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. படுகை நிலங்கள், மணல் கலந்த பூமி, நல்ல வடிகால் வசதி கொண்ட நீர் தேங்காத நிலங்கள் பப்பாளி பயிரிட ஏற்றன. களிமண் பூமி பப்பாளி சாகுபடி செய்ய உகந்ததல்ல. 


தட்ப வெப்ப நிலை சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் சற்றே வெப்பம் அதிகமாகவும் நிலவும் இடங்களில் இப்பயிர் நன்கு வளரும் மலைப்பகுதிகளில் சுமார் 100 மீட்டர் உயரம் வரையிலான இடங்களிலும் இது வளர்ந்து பயனளிக்கக் கூடியது.


பருவம்


வெப்பநிலை அதிகம் நிலவம் சமவெளிப் பகுதிகளில், நீர் வசதி இருப்பின் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நடவுப் பருவத்தில் மிகவும் அதிக மழை இல்லாமலிருத்தல் நல்லது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஜுன் முதல் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் முதல் டிசம்பர் வரை உள்ள காலங்கள் நடவுக்கு ஏற்றவை.


விதையும் விதைத்தலும்


பப்பாளிப் பயிர் விதைகள் மூலமாகவே இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் அளவு பப்பாளி வளர்ப்பதற்கு சுமார் 200 கிராம் விதை தேவைப்படும்.


ஒரு பங்கு மக்கிய தொழு உரம், ஒரு பங்கு வண்டல் அல்லது செம்மண் மற்றும் இரு பங்கு மணல் கலந்த மண் கலவையை 14 செ.மீ நீளம் 9 செ.மீ. அகலம் உள்ள பாலித்தீன் பைகளில் இட்டு, நிரப்பிக் கொள்ளவேண்டும். 


ஒரு பாலத்தீன் பையில், குறைந்தது நான்கு விதைகளாது விதைக்கவேண்டும். விதைகளை ஒரு செ.மீ. ஆழத்தில் விதைக்கவும், பிறகு பாலித்தீன் பைகளைச் சற்று நிழல் படும் இடத்தில் அடுக்கி வைத்துப் பராமரிக்க வேண்டும்.


தினமும் காலையிலும், மாலையிலும் பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். விதைகள் 10 முதல் 20 நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும். செடிகள் கிட்டத்தட்ட ஒரு அடி உயரம் வளரும் தருணத்தில் நிலத்தில் நடலாம். நாற்றுக்கள் சுமார் 40 முதல் 50 நாட்களில் நடவுக்குத் தயாராகும்.



நிலம் தயாரித்தல்


நிலத்தை 2 முதல் 3 முறை நன்கு உழுது சமப்படுத்திக் கொள்ளவேண்டும். பிறகு 45 செ.மீ அகலம் 45 செ.மீ. ஆழம் உள்ள குழிகளை 1.8 மீ மற்றும் 1.8 மீ என்ற இடைவெளியில் 6 அடிக்கு 6 அடி எடுக்கவேண்டும். அவை சுமார் ஒருவார காலம் ஆர விடப்படவேண்டும். குழியிலிருந்து எடுத்த மண்ணுடன் 10 கிலோ மக்கிய தொழு உரம் மற்றும் 50 கிராம் மணிச்சத்து சேர்த்து குழிகளை நிரப்பவேண்டும்.


நாற்று நடுதல்


நாற்றுக்களை வெயில் தாழ்ந்த மாலை வேளையில், குழிகளின் சரி மத்தியில் நடவேண்டும். 4 முதல் 5 நாற்றுக்கள் முளைத்த பாலித்தீன் பைகளைப் பைகளின் அடிப்பாகத்தில் மட்டும் சற்றே கிழித்துவிட்டு குழியில் நடவேண்டும். 


கூடிய மட்டும் செடிகள் உயிர் பிடிக்கும் வரை பூவாளியில் தண்ணீர் விடுதல் நல்லது குழிகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம். காற்றுக் காலங்களில் செடிகளுக்கு 2 அடி உயர குச்சிகளை வைத்துக் கட்டுதல் நன்று.


மண் அணைத்தல்


செடிகள் சற்று வளர்ந்தவுடன் தேவைக்கேற்ப மரங்களைச் சுற்றிலும் மண்ணை அணைக்கவேண்டும். மரம் காற்றினால் சாயாது இருக்க இது உதவும். பொதுவாக நட்ட 4ஆவது மாதத்தில் மண் அணைப்பது நல்லது.


ஆண், பெண் செடிகள் நீக்குதல்


செடிகள் நடவு செய்த மூன்று மாதத்திற்குப் பிறகு பூக்க ஆரம்பிக்கும். இந்நிலையில் ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு இதர ஆண், பெண் செடிகளை நீக்கவேண்டும். அதே வேளையில் 10 முதல் 15 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியை விடவேண்டும். ஆண் மரங்களில் பூக்கள் நீண்ட கொத்தாகக் காணப்படும். 


கோ-3 மற்றும் கோ-7 போன்ற இருபால் ரகங்களில் இருபால் பூக்கள் கொண்ட மரங்களை மட்டும் வைத்துக்கொண்டு பெண் மரங்களை நீக்கிவிடவேண்டும்.


உரமிடுதல்


ஆண், பெண் செடிகள் நீக்கியவுடன் செடி ஒன்றிற்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து ஒவ்வொன்றிலும் 50 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். இதே அளவு இரண்டு மாதத்திற்கொருமுறை கொடுக்கவேண்டும். உரம் கொடுத்த பின் செடிகளுக்கு நன்கு நீர் பாய்ச்ச வேண்டும்.


நீர் பாய்ச்சுதல்


பப்பாளிப் பயிருக்கு 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுதல் வேண்டும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பாதுகாக்கவேண்டும். களை எடுத்தல் பப்பாளி பயிர் சற்றே வளரும் வரை 3 அல்லது 4 முறை களை எடுக்க வேண்டிவரும். பின்னர், பெரும்பாலும் நிழல் படர்ந்து விடுவதால் களைகள் வளர்வதில்லை.


பப்பாளியில் ஒருங்கிணைந்த மேலாண்மை


பப்பாளியை நடவு செய்ததில் இருந்து 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்கவேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும், அதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்கவேண்டும். 40 நாளுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.


பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்


6ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில 5 கிலோ பாசிப்பயறு, 5 கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளளவு உள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். 


டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல் காய் பிடித்து நன்கு வளரும். 7ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும் 8ம் மாதம் காய் பறிக்கலாம். 



9ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12ம் மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். 13ம் மாதத்தில் மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.


மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்


தாக்கப்பட்ட இலை மற்றும் காய்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும். மஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும். சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் ‘கேப்னோடியம் எனப்படும் கரு நிற பூசணம் படர்ந்திருக்கும்.


கட்டுப்படுத்தும் மேலாண்மை


பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளை அழித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும் போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங் கொட்டைச்சாறு (10 கிலோ / எக்டருக்கு) என்றளவில் கலந்து தெளிக்க வேண்டும். 


அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல் ‘தயோமீத்தாக்சாம் 2 கிராம் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தல் குளவி ஒட்டுண்ணியான அசிரோபேக்ஸ் பப்பாயினை வயலில் விட்டு கட்டுப்படுத்துதல் (ஏக்கருக்கு 50 எண்கள் வீதம்) போன்ற வழிமுறைகளை கையாண்டால் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.


அறுவடை


செடிகள் நட்ட 9 முதல் 10வது மாதத்தில் பப்பாளி அறுவடைக்கு வரும் பழங்களின் தோலில் சற்றே மஞ்சள் நிறம் தோன்ற ஆரம்பிக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். மகசூல் கோ-2, கோ-5, கோ-6 ரகங்கள் போன்ற ஒரு பால் மர ரகங்கள் 200 முதல் 250 டன்கள் ஒரு எக்டருக்கு கோ-3, கோ-7 மற்றும் சோலோ ரகங்கள் 150 முதல் 200 டன்கள் வரை சீரான மகசூல் கிடைக்கும்.


பப்பாளிப் பால் எடுக்கும் முறை


நடவு செய்த 3வது மாதத்திலிருந்து காய்கள் ஆரம்பிக்கும் 75 முதல் 90 நாட்கள் வயதுடைய முதிர்ந்த காய்களிலிருந்து பால் எடுக்க வேண்டும். ஒரு பழத்திலிருந்து நான்கு முறை பால் எடுக்கலாம். ஒவ்வொரு முறை பால் எடுப்பதற்கு குறைந்தது 3 அல்லது 4 நாட்கள் இடைவெளி கொடுத்து பால் எடுக்க வேண்டும். 



பழத்தின் நான்கு பகுதிகளிலும் மூங்கில் குச்சியின் நுனியில் கூரான பிளேடினைச் செருகி சுமார் 2 மி.மீ. அளவு ஆழத்தில் கீறிப் பால் எடுக்க வேண்டும். அதி ஆழமாகக் கீறக்கூடாது. பாலினைச் சேகரிக்க அலுமினியம் அல்லது பாலித்தீன் சீட்டுகளை மரத்தின் தண்டுப் பகுதியில் பொருத்திச் சேகரிக்கலாம். பாலினை காலை 6 முதல் 9 மணி வரை சேகரிப்பது மிகவும் சிறந்தது.


பப்பாளி பால் எடுக்கும் திறன்


கோ 2-ல் 25 முதல் 30 கிராம் / பழம்

கோ 5-ல் 50 முதல் 70 கிராம் / பழம்


பப்பாளி விதைகள் வட்ட வடிவத்தில் சிறியதாக கருப்பு அல்லது கருமை கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். பொதுவாக பப்பாளி விதைகளின் 1000 விதைகளின் எடை 14.5 கிராம் ஆகும். ஒரு ஏக்கரில் பப்பாளி நடவு செய்ய சுமார் 200 கிராம் விதை தேவைப்படும். பப்பாளி பழ விதைகளை பொறுத்தமட்டில் விதைக்கும் விதைகளுக்கு 98 சதவீத புறத்தூய்மையும், முளைப்புத்திறன் 60 சதவீதமும், ஈரப்பதம் 12 சதவீதமும் இருக்க வேண்டும். 


எனவே பப்பாளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனை மேற்கொள்பவர்கள் விதைகளின், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறன் ஆகியவற்றை மிக துல்லியமாக அறிந்துகொள்ள அந்தந்த மாவட்டத்தில் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையங்களை அணுகி பயன்பெறலாம்.


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விதைப்பரிசோதனை மேற்கொள்ள 40 கிராம் விதை மாதிரியுடன் விதைப்பரிசோதனை கட்டணமாக ரூ.30/- உடன் பெரியமில்தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையத்தை அணுகி பயன்பெறலாம்.



மேலும் பப்பாளி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் நல்ல ரகங்களை தேர்வு செய்து, தரமான விதைகளை பெற்று உரிய சாகுபடி தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக மகசூல் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இத்தகவலை, து.சிவவீரபாண்டியன், தஞ்சை சரக விதை பரிசோதனை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ச.கண்ணன், க.புவனேஸ்வரி விதைப்பரிசோதனை நிலையம், திருவாரூர் அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் விபரங்களுக்கு, ச.கண்ணன், மூத்த வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், திருவாரூர். 99655 63563 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் படிக்க....


பப்பாளி சாகுபடி செய்து ஒரு ஹெக்டருக்கு 4 லட்சம் வரை சம்பாரிக்கலாம்! வேளாண் விஞ்ஞானி!


நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் தாயாரிப்பு மற்றும் வளமான நெல் நாற்றுக்கள் பெற வழிமுறைகள்!!


லட்சங்களில் வருமானம் தரும் மா சாகுபடி செய்வதற்கான 5 சிறந்த டிப்ஸ்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

1 Comments

  1. Sundarta very informative content. Your content helped me a lot. Sundarta Post

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...