குளிர் காலங்களில் கோழி வளர்ப்பு – சில குறிப்புகள்!!



குளிர் காலங்களில் கோழி வளர்ப்பு – சில குறிப்புகள்!!


குளிர்காலங்களில் தீவன மேலாண்மை முதல் நோய்த்தடுப்பு வரை அனைத்திலும் கோழி வளர்க்கும் பண்ணையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். குளிர்/மழைக்காலங்களில் கோழிகளை வளர்ப்பது என்பது சவால் நிறைந்ததாகும். 


குளிர்/மழைக்காலங்களில் மேய்ச்சல் இன்றி முழுவதும் தீவனத்தை நம்பியே இருக்க வேண்டும். இதற்காக பண்ணையாளர்கள் போதுமான தானியங்கள், அடர்தீவனம், புல், கீரை வகைகள் அல்லது இதர விவசாய கழிவு பொருட்களை ஈரம் படாமல் பாதுகாத்து வைப்பது மிக அவசியம். 



ஈரம் படும் தருவாயில் தீவனங்களில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு கோழிகளில் உபாதைகளை ஏற்படுத்தும். நச்சு தாக்கிய தீவனங்களைப் பகுப்பாய்வு செய்திடல் வேண்டும். இந்த ஆய்வுக்கு கால்நடை மருத்துவர், கால்நடை மருத்துவக் கல்லூரிகளையோ அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களையோ அனுகலாம்.

 

குளிர்/மழைக்காலத்தில் கோழி வளர்ப்பு

 

கோழிகளுக்கு தீவனத்தில் புரதச்சத்தை குறைத்து எரிசக்தி அதிகம் கொண்ட தீவனங்களை அளிக்க வேண்டும். கோழிகளுக்கு வெதுவெதுப்பான தூய்மையான குடிநீரை அளித்தல் வேண்டும்.


மழை/குளிர்காலங்களில் கோழிகளில் முட்டை உற்பத்தி குறைந்தே காணப்படும். மாறுபடும் தட்பவெப்ப நிலையால் முட்டை உற்பத்தி குறைகிறது. தட்பவெப்பத்தைச் சீராக்க பக்கவாட்டில் திரைச்சீலைகள் அல்லது சாக்கு பைகள் போன்றவற்றை கட்டிவைத்தல் வேண்டும்.



கோழிகளின் எச்சத்தால் ஏற்படும் மாசுபாட்டாலும் ஈரப்பதத்தாலும் ஒட்டுண்ணிகளின் உற்பத்தி அதிகரித்தும், நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. இவற்றைத் தடுக்க ஆழ்கூள முறையில், அடிக்கடி நெல், உமி மற்றும் மரத்தூள் போன்றவற்றை மாற்றுதலும் தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.


கோழி கொட்டகையில் உருவாகும் புற ஒட்டுண்ணிகளை ஒழிக்க தகுந்த பூச்சிக்கொல்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் 4 முதல் 5 மி.லி என்ற அளவில் கலந்து விசைத்தெளிப்பான் மூலம் சுழற்சி முறையில் கொட்டகையில் அடித்தல் வேண்டும்.


மேலும், மழைக்காலங்களில் இடி, மின்னல் தாக்கத்தால் விபத்துகள் ஏற்படாமலும், கொட்டகையில் மின்கசிவு போன்றவை ஏற்படாமலும் பண்ணையாளர்கள் கோழி மற்றும் கால்நடைகளை காத்திடல் வேண்டும்.



ஆழ்கூளம் ஈரமாக இருப்பதால் இரத்தக்கழிச்சல் நோய் மற்றும் நுண்ணுயிரி நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே மழைக்காலத்திற்கு முன்பு அட்டவணைப்படி தடுப்பூசி போடுவதுடன், ஆழ்கூளம் எப்பொழுதும் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 


இரத்தக்கழிச்சல் நோய்க்கான மருந்துகளை தண்ணீர் மூலமாக கொடுக்க வேண்டும். சால்பாகுனாக்சலின், சால்பாடிமிடின், ஆம்புரோலியம் போன்ற மருந்துகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து கொடுப்பது எப்போதும் சிறந்தது. வைட்டமின் சத்துக்களும் சேர்த்துக் கொடுப்பது சிறந்தது.


இரத்தக்கழிச்சல் நோயை தடுப்பதில் பண்ணையின் தரையில் உள்ள ஆழ்கூளத்தின் பராமரிப்பே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆழ்கூளம் இல்லாத கூண்டு முறை கோழி வளர்ப்பில் இந்த பாதிப்பு இருக்காது. ஆழ்கூளத்தை வாரத்திற்கு இரண்டு முறையாவது கிளறி விடுதல் வேண்டும். சுண்ணாம்பு பவுடரை ஆழ்கூளத்தோடு கலக்கலாம். 


ஆழ்கூளம் ஈரமானாலும் அவற்றை நீக்கிவிட்டு காய்ந்த ஆழ்கூளத்தை போட வேண்டும். பண்ணையில் ஆழ்கூளப் பராமரிப்பு முறைகள் சரியாக இருந்தால் நோயின்றி கோழிகளை வளர்க்கலாம்.


மழைக் காலங்களில் கோழிகளை முட்டை பொரிப்பதற்காக அடைவைத்தலும் அல்லது செயற்கை பொரிப்பான் மூலம் கோழிக்குஞ்சுகள் பொரிப்பதையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பராமரிப்பு குறைவாக இருந்தால் குளிரினால் கோழிக்குஞ்சுகளில் அதிக இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.



குஞ்சுகளுக்கு போதுமான வெப்பம் கொடுப்பது அவசியம். மழைக்காலங்களில் சுத்தமான குடிநீர் அவசியம். ஏனெனில் பெரும்பாலான நோயக்கிருமிகள் குடிநீர் மூலமாகவே பரவுகிறது. எனவே சுகாதாரமான குடிநீர் கொடுப்பது அவசியம். மிகவும் குளிரான சமயங்களில் வெதுவெதுப்பான குடிநீர் கொடுப்பது அவசியம்.

 

மேலும் விவரங்களுக்கு


முனைவர் அ.லட்சுமிகாந்தன், மருத்துவர் ம.க.விஜயசாரதி, உதவிப் பேராசிரியர்கள், முனைவர் ர.வேலுசாமி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு. தொடர்புக்கு : 04372-234012-4225.


மேலும் படிக்க....


கால்நடைகளில் ஏற்படும் நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை முறை தீர்வுகள்!!


பார்பரி வெள்ளாடுகள் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்!!


சுர்தி வெள்ளாடு வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்!! சுர்தியின் சிறப்புகள் என்ன?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments