மிளகாய் சாகுபடியில் நோய் மேலாண்மை! விதையலுகல் / நாற்றழுகல் அறிகுறிகள்!!


மிளகாய் சாகுபடியில் நோய் மேலாண்மை! விதையலுகல் / நாற்றழுகல் அறிகுறிகள்!!


தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

 

இதற்கு இங்கு நிலவும் தட்ப வெப்பநிலையும் கரிசல் சார்ந்த மண்வளமுமே காரணம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக மிளகாயின் உற்பத்தியும் கொள்முதலும் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக சாகுபடியில் ஏற்படும் நோய்களும் அதனால் ஏற்படும் மகசூல் இழப்புகளும் தனியார் நிறுவனங்களின் தரமற்ற விதைகளுமே காரணமாக உள்ளது. 



மிளகாய் சாகுபடியில் ஏற்படும் நோய்களையும் அதை கட்டுப்படுத்தும் அல்லது மேலாண்மை செய்யும் நுட்பங்களையும் இங்கே காண்போம்.

 

விதையலுகல் / நாற்றழுகல் (பிய்த்தியம் ஆஃப்பனிடெர்மேடம்) அறிகுறிகள்

 

இது பெரும்பாலும் நாற்றங்காலில் ஏற்படும் நோய் ஆகும். குறிப்பாக விதையின் மேற்பரப்பு பகுதிகளில் நீர்கோர்த்த வடுக்களை உருவாக்கி விதைகள் முளைக்கும் முன்னரே அழுகிவிடும். நாற்றுகளின் கீழ் தண்டு பகுதியில் நீர் கோர்த்த கருப்பு நிற வடுக்கள் உருவாக்கி பெரியதாக மாறும். பின் அப்பகுதி முழுவதும் அழுகி மேல் உள்ள இலைகள் மஞ்சளாக மாறிவிடும். நாற்றுகள் அழுகி கவிழ்ந்து விடும்.

 

மேலாண்மை


  • அடர் நடவு முறையை கைவிடுதல்.


  • பூஞ்சான கொல்லியான திறம் (அல்லது) கேப்டான் 4 கிராம் / கிலோ என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்தல்.


  • அதிக அளவு நீர் பாய்ச்ச கூடாது.


  • மேலும் மண்ணில் காப்பர் குளோரைடு (0.2%) செடிகளின் வேர்களில் படும்படி தெளித்தல்.

 


சாம்பல் நோய் (லெவிலுல்லா டேரிகா) அறிகுறிகள்


இது பெரும்பாலும் இலைகள் மற்றும் பழங்களில் தாக்குதலை ஏற்படுத்தும். முதிர்ந்த இலைகளின் அடிப்பரப்பில் வெள்ளை நிற திட்டுகளாக பூஞ்சான் வளர்ச்சி காணப்படும். இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிற திட்டுகளாக காணப்படும். 


இலைகள் பழுத்து முழுவதும் மஞ்சளாக மாறி விடும். செடிகளை சுற்றி உதிர்ந்த இலைகள் அதிகமாக காணப்படும். மிளகாயின் மேற்பரப்பில் வெண்ணிற திட்டுகளாக பூஞ்சான் வளர்ச்சி காணப்படும். அவை முதிர்ச்சியடையாமல் உதிர்ந்து விழும்.

 

மேலாண்மை


  • பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளை சேகரித்து அழித்தல்.


  • நடவு செய்யப்பட்ட வயல் வெளிகளை சுத்தமாக பேணுதல். இலை முதல் பூக்கும் பருவத்தில் பூஞ்சாணகொல்லி டினோகேப் (0.05%) தெளித்தல் (அல்லது) நனையும் கந்தகம் (0.25%) தெளிக்க வேண்டும்.


  • குறிப்பாக இலைகளின் அடிப்பரப்பில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

 


பழ அழுகல் / பின்வாடல் (கொலீடோட்ரைகம் கேப்சிஸி) அறிகுறிகள்


இந்த பூஞ்சாணம் செடியில் பூக்கும் நேரத்தில் நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது. இலைகள், தண்டுகள், மலர்காம்புகள் பகுதிகளில் சிறு வடுக்களை ஏற்படுத்தி அவை பெரிதாக மாறி செடிகளின் நுனிக்குருத்து முதல் கீழ்நோக்கி வாட ஆரம்பித்து பின்னர் செடிகளின் ஒரு பகுதி கருகி காணப்படும். அந்த பகுதியில் உள்ள மொட்டுக்கள், பூக்கள் மற்றும் காய்கள் சிறுத்து கருகி உதிர்ந்துவிடும்.

 

மிளகாயின் காய் மற்றும் பழங்களின் மேற்பரப்பில் கருப்பு நிற வட்ட வடிவிலான புள்ளிகள் தோன்றும். நாளாக நாளாக இவை பெரியதாக மாறி பழங்களின் முக்கால்வாசி பகுதிகளில் பரவுகிறது. மேலும் பழுப்பு நிறமாக இதன் மையப்பகுதி மாறி அந்தப்பகுதிகளில் நோயினை உண்டாகும் கருப்பு நிற வித்துகள் காணப்படும். பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றி அடர் நிற வளையங்கள் காணப்படும். இறுதியாக பழங்கள் அழுகி உதிர்ந்து விடும்.

 


மேலாண்மை


  • நோயற்ற விதைகளை தேர்வு செய்தல்.


  • திரம் அல்லது கேப்டான் (4 கி \ கிலோ) கொண்டு விதை நேர்த்தி செய்தல்.


  • மூன்று இடைவெளிகளாக, பூக்கும் பருவம், காய்க்கும் பருவம் மற்றும் முதிர்ச்சியடையும் பருவத்தில், சிரம் (0.2%) அல்லது கேப்டான் (0.2%) அல்லது சினேப் (0.1%) தெளிக்க வேண்டும்.

 

செர்க்கோஸ்போரா இலைப்புள்ளி நோய் (செர்க்கோஸ்போரா கேப்சிசி) அறிகுறிகள்


சிறிய வட்ட வடிவிலான பழுப்பு நிற புள்ளிகள் இலைகளில் தோன்றும். நாளடைவில் இந்த புள்ளிகள், தண்டுகள், பூ காம்புகள், இவைகளில் பரவி விடும். 


இந்த புள்ளிகள் மைய பகுதிகளில் வெளிறிய பழுப்பு நிறத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளில் அடர் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்படும். இறுதியாக இலைகள், பூக்கள் அதிக அளவில் காய்ந்து உதிர்ந்து விடும்.

 


மேலாண்மை


  • காய்ந்த இலைகள் மற்றும் செடிகளை தீயிட்டு அழித்து விட வேண்டும்.


  • மேன்கோசெப் (0.2%) அல்லது குளோரோதலோனில் (0.1%) மருந்தினை இலைகளில் படும்படி தெளிக்க வேண்டும்.

 

வாடல் நோய் (பியூசரியம் ஆக்சிஸ்போரம் பா. ஸ். கேப்சிசி) அறிகுறிகள்


இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். தண்டுகள் மற்றும் பூக்கிளைகள் ஒருபக்கமாக வாடும். தண்டின் பகுதிகள் பழுப்பு நிறமாக மாறி செடிகள் வாடி தொங்கிவிடும். தரை ஒட்டிய தண்டு உட்பகுதியானது அடர் பழுப்பு நிறத்துடன் காணப்படும். இறுதியில் செடிகள் இறந்து விடும்.

 

மேலாண்மை


  • பயிரிடும் முன் நிலத்தை நன்கு ஆழ உழ வேண்டும்.


  • நோயற்ற விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.


  • காய்ந்த இலைகள் மற்றும் செடிகளை தீயிட்டு அழித்து விட வேண்டும்.


  • விதைகளை கார்பென்டாசிம் 2கி / கிலோ என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.


  • காப்பர் ஆக்சி-குளோரைடு மருந்தினை 0.2% என்ற விகிதத்தில் வேர்ப்பகுதியில் படும்படி தெளிக்கவோ (அ) கரைசலாகவோ அளிக்க வேண்டும். காய்ந்த இலைகள் மற்றும் செடிகளை தீயிட்டு அழித்து விட வேண்டும்.

 


பாக்டீரியா இலைப்புள்ளி நோய் (சேந்தோமோநாஸ் கேம்பஸ்டரிஸ் பி. வி. வெசிக்கடோரியா) அறிகுறிகள்


இலைகள் சிறிய வடவடிவிலான (அ) ஒழுங்கற்ற பளபளக்கும் புள்ளிகளுடன் காணப்படும். புள்ளிகள் பெரிதாகும்போது அதன் மையப்பகுதி அடர் நிறத்துடன் காணப்படும். 


புள்ளிகள் ஒன்றிணைந்து ஒழுங்கற்ற வடுக்களை உருவாக்குகின்றன. பாதிக்கப்பட்ட இலைகள் வெளிறி உதிர்ந்து விடும். இலைக்காம்புகள் மற்றும் தண்டுகளும் பாதிக்கப்படுகின்றன. தண்டு ஒரு வித புடைப்புடன் வளர்ச்சி உருவாகி, கிளைகள் வாட வழிவகுக்கிறது. பழங்களில் வட்டமாக, வெளிறிய மஞ்சள் நிற விளிம்புடன் கூடிய நீர் கோர்த்த புள்ளிகள் உருவாகும். 


புள்ளிகள் பழுப்பு நிறமாக மாறி, மையத்தில் தாழ்ந்து காணப்படும், இதில் பாக்டீரியா கூட்டமைப்பின் பளபளப்பான நீர்த்துளிகள் காணப்படலாம்.

 

மேலாண்மை


  • வயல்வெளியினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


  • நோயற்ற விதைகளையும், நாற்றுகளையும் தேர்வு செய்தல்.


  • விதைப்பதற்க்கு முன் 0.1% மெர்குரிக் குளோரைடு கொண்டு 2-5 நிமிடம் விதை நேர்த்தி செய்தல்.


  • நாற்றக்காலில் போர்டாக்ஸ் கலவை 1% (அ) காப்பர் ஆக்சிகுளோரைடு 0.2% தெளிப்பது நல்ல பலனை தரும்.


  • ஸ்ட்ரெப்டோமைசின் மருந்தினை காய்கள் உருவான பின்பு தெளிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது.

 


இலைச்சுருள் நோய் (டி.என்.ஏ வைரஸ்) அறிகுறிகள்


இலைகள் அதன் மைய பகுதியை நோக்கி உட்புறமாக சுருண்டுவிடும். பார்ப்பதற்கு படகு வடிவில் இலைகள் மாறிவிடும். குட்டையான இடைக்கணுக்கள், இலைகளின் அளவு மற்றும் தண்டுகள் வளர்ச்சிக் குறைந்து செடிகளின் உயரம் குறைந்துவிடும். 


மொட்டுக்கள் மற்றும் பூக்கள் முழுவளர்ச்சி அடையாமல் சுய-மலட்டுத்தனமையாக மாறிவிடும். வெள்ளை ஈக்களே இந்த வைரசினை பரப்புகின்றன.

 

மேலாண்மை


  • வயல்வெளியினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


  • நோயற்ற விதைகளையும், நாற்றுகளையும் தேர்வு செய்தல்.


  • தொடர்ந்து மிளகாய் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.


  • நாற்றங்காலை நைலான் வலை (அ) வைக்கோல் கொண்டு மூடி வைக்க வேண்டும்.


  • டைமீதோயேட் 2மிலி. என்ற அளவில் தெளிக்க வேண்டும்.


  • பாதிக்கபட்ட செடிகளை சேகரித்து தீயிட்டு அழித்துவிட வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு, முனைவர் பெ. முரளி சங்கர், உதவிப் பேராசிரியர், பயிர் நோயியல் துறை, எஸ்.ஆர்.எஸ்.வேளாண்மை கல்லூரி, வேடசந்தூர் – 624 710 மற்றும் முனைவர் லோ. கார்த்திபா, உதவிப் பேராசிரியர், பயிர் நோயியல் துறை, த.வே.ப.க, கோயம்புத்தூர் – 641 003.


மேலும் படிக்க....


மக்காசோளம் அறுவடை உத்திகள் மற்றும் விற்பனை குறித்த தகவல்!!


பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!!


விதைகளில் பிற ரக சோதனை செய்வீர்! கலப்பினம் இல்லாத விதைகளை பெறுவீர்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments