வேளாண் பயிர் சாகுபடியில் மகசூலை அதிகரிக்கும் TNAU பயிர் பூஸ்டர்கள் பயன்படுத்துவது எப்படி?
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் உற்பத்தி மற்றும் விளைச்சலை மேம்படுத்த பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. மேலும் விவசாயிகள் பரிந்துரைக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் ஆராய்ச்சிகளின் மூலம் நிவர்த்தி செய்து வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் பருவ சூழலால் பயிர் உற்பத்தித்திறனை அதிகரிப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. பொதுவாக ஒரு பயிரின் இயல்பான வளர்ச்சிக்கு 17 வகையான சத்துக்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
இவற்றில் பேரூட்டச்சத்துக்களும் (கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் கந்தகம்) நுண்ணூட்டச்சத்துக்களும் (இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், மாங்கனீசு, மாலிப்டினம், குளோரின் மற்றும் நிக்கல்) அடங்கும். இந்த சத்துக்களில் ஒன்று அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ பயிரின் இயல்பான வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்படும்.
மேலும் பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் குறிப்பாக வறட்சி, வெப்பநிலை அதிகரித்தல், நிலத்தடிநீரின் உப்புத்தன்மை, அதிக மழைப்பொழிவு போன்ற பல காரணங்களால் பயிர்களின் விளைச்சல் குறைந்து வருகிறது. அதேசமயம் குறைவான பயிர் உற்பத்திக்கு ஒரு முக்கிய காரணம் நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு அதனுடன் கூடிய பயிர் வினை ஊக்கிகளின் பற்றாக்குறையாகும்.
இதை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பயிர் வினையியல் துறையின் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றின் முடிவாக TNAU பயிர் பூஸ்டர்களை அறிமுகம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.
TNAU பயிர் பூஸ்டர்கள்
பயிர்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை உள்ளடக்கியது TNAU பயிர் பூஸ்டர்கள் ஆகும். இப்பூஸ்டர்கள் மிகச்சிறந்த இடுபொருளாக இருப்பதனால் அதிக பரப்பளவில் விவசாயிகள் இதனை பயன்படுத்துவதன் மூலம் வருமானத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
பயிர்களின் முக்கியமான வளர்ச்சி பருவத்தில் TNAU பயிர் பூஸ்டர்கள் இடுவதன் மூலம் தாவரதிசுக்களில் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் அளவை நிலை நிறுத்தி பயிர் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் வினையியல் துறையானது ஆறு TNAU பயிர் பூஸ்டர்களை முக்கிய பயிர்களான தென்னை, பயறு வகைகள், நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம் மற்றும் கரும்பு ஆகியவற்றிற்கு பரிந்துரைத்துள்ளது.
இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முனைப்பான மூலதன திட்டம் மூலம் வணிகமயமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்துவருகிறது. இந்த ஆறு பூஸ்டர்களும் ஒரு இயல்பான பயிர்வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசியமான பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் உள்ளடக்கிய ஒரு கலவை ஆகும்.
இதனை பயிர்களுக்கு இடுவதன் மூலம் ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் குறைபாடு மற்றும் வினையியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட பருவத்தில் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவையையும் பூர்த்தி செய்கிறது.
இந்த பூஸ்டர்களின் பயன்பாடு சுற்றுச்சூழல் காரணிகளுக்கு எதிரான சகிப்புத் தன்மையை அளிப்பதனால் மகசூல் இழப்பிலிருந்து பயிர்களைக் காப்பது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட பயிரின் சாகுபடி பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் அந்த மாநிலத்தின் உணவு உற்பத்தியும் அதிகரிக்கிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், பயிர் வினையியல் துறையின் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு பூஸ்டர்களை, தமிழ்நாடு விவசாயிகள் நேரடியாகவும், தமிழக அரசின் வேளாண்மைத் துறையின் பல்வேறு திட்டங்களின் மூலமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் அண்டை மாநிலங்களான, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானவை சார்ந்த விவசாயிகளுக்கும் பூஸ்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த பயிர் பூஸ்டர்கள் பயன்படுத்துவதின் மூலம் பயிரின் மகசூல் 20 சதம் tiuஅதிகரிக்கும் என ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனவே உழவர் பெருமக்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பயிர் பூஸ்டர்களை சரியான அளவில், சரியான பருவத்தில், பயிர்களுக்குப் பயன்படுத்தி அதிக மகசூலை அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TNAU தென்னை டானிக்
தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும் என்பது பழமொழி. தென்னையின் அனைத்துபாகங்களும் மிக உபயோகமாக உள்ளதால் உலகிலேயே பயிரிடப்படும் பனைவகைகளுள் மிக பயனுள்ள மரம் தென்னை மரம் என்றால் அது மிகையாகாது.
ஆகவே, தென்னை பயிரிடும் விவசாயிகளுக்கு வேர் மூலம் உறிஞ்சும் TNAU தென்னை டானிக் என்ற தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகம் செய்தனர். தொலை தூரத்தில்உள்ள விவசாயிகள் மற்றும் தென்னை சாகுபடி பரப்பளவு அதிகமுள்ள விவசாயிகளின் நலன் கருதி அடர் திரவம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உதாரணமாக ஒரு லிட்டர் அடர் திரவத்துடன் நான்கு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஐந்து லிட்டராக மாற்றி அதிலிருந்து 200 மி.லி வீதம் பாலித்தீன் பையில் ஊற்றி 25 மரங்களுக்கு வேர் மூலம் செலுத்த வேண்டும். இதனை ஒரு வருடத்திற்கு இரண்டு பாக்கெட் வீதம் ஆறு மாத இடைவெளியில் வேர் மூலம்செலுத்த வேண்டும். இதனால் தென்னையில் பச்சையம் உற்பத்தி அதிகரித்து ஒளிசேர்க்கையின் திறன் கூடுகிறது.
மேலும் பாளைகளின் எண்ணிக்கை அதிகரித்து, குரும்பை கொட்டுதல் குறைந்து காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடுகிறது. இதன் மூலம் 20 சதவீதம் வரைவிளைச்சல் அதிகரிப்பதோடு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
இந்த வெற்றிக்கு பின்னர் பயறுவகைப் பயிர்கள், நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம்மற்றும் கரும்பு பயிர்களுக்கான பூஸ்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பூஸ்டர்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்து ஒரு ஏக்கருக்கு இலைவழித் தெளிப்பாக பயன்படுத்துவதனால் தாவரத்தின் வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிப்பதோடு விளைச்சலை 15 முதல் 20 விழுக்காடு வரை அதிகரிக்க முடியும்
TNAU பயறு ஒன்டர்
பயறு வகைகள், புரதங்கள் நிறைந்தவை மற்றும் இந்தியாவின் ஏழைமக்களுக்கான புரதத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இவை தானியத்துக்கு பிறகு இரண்டாவது முக்கியப் பயிர்களாகும்.
பொதுவாக பயறுவகைப் பயிர்களில் சில வினையியல் காரணங்களால் பூக்கள் மற்றும் காய்கள் அதிகமாக உதிர்ந்து மகசூல் குறைந்து காணப்படும். அதேசமயம் வறட்சி, அதிக வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற சாதகமற்ற சூழல் ஏற்பட்டால் மேலும் விளைச்சல் குறைந்து அதிக மகசூல் இழப்புக்கு வழி வகுக்கும்.
இக்குறைபாட்டினைக் களைந்து அதிக மகசூலைப் பெற பயறுவகைப் பயிர்களுக்கு TNAU பயறு ஒன்டர் என்ற பூஸ்டரை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் பூக்கும் பருவத்தில் இலைவழித் தெளிப்பாக தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் பூக்கள் உதிர்வதைக் கட்டுப்படுத்தி விளைச்சல் 10-20 சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.
TNAU நிலக்கடலை ரிச்
நிலக்கடலை தமிழ்நாட்டின் முக்கியமான எண்ணெய்வித்துப் பயிராகும். நிலக்கடலையின் பூ மற்றும் காய் பிடிக்கும் பருவமானது வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.
எனவே, நிலக்கடலையில் பூவை தக்கவைத்தல், நெற்று நிரப்புதல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்க விதைத்த 35 ஆம் நாள் (50 சதவிகித பூக்கும் சமயத்தில்) மற்றும் 45 ஆம் நாள் (காய் முற்றும் பருவம்) ஒவ்வொரு முறையும் 2 கிலோ வீதம் ஏக்கருக்கு மொத்தமாக 4 கிலோ அளவில் இலைவழியாகத் தெளிப்பதன் மூலம் பூ பிடிக்கும் திறன் அதிகரிப்பதோடு பொக்குக்கடலைகள் உருவாவதும் குறைகின்றது. இதனால் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கின்றது.
TNAU பருத்தி பிளஸ்
தமிழ்நாட்டில் பரவலாக பயிரிடப்படும் நார்ப்பயிர்களில் பருத்திமுதன்மையானதாகக் கருதப்படுகிறது. இது அதிக வாழ்நாள் (180 நாட்கள்) கொண்ட மானாவாரி பயிராக இருப்பதாலும் மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு காரணமாகவும், அதேசமயம் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பற்றாக்குறையாலும் மொட்டுக்கள், பூக்கள் மற்றும் காய்கள் உதிர்வது அதிகரித்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
எனவே பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெற்றிட TNAU பருத்தி பிளஸ் என்ற பூஸ்டரை பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் பருவங்களில் பருவத்திற்கு தலா 2.5 கிலோ என்ற அளவில் ஏக்கருக்கு 5 கிலோ வீதம் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறைந்து காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுத்து 15 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கின்றது.
TNAU மக்காச்சோள மேக்சிம்
தமிழகத்தில் மக்காச்சோளம் பொதுவாக மானாவாரிப் பயிராக பயிரிடப்படுகிறது. இப்பயிர் மண்ணில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சும் தன்மை கொண்டதால் மண்ணின் வளமானது குறைந்து மகசூல் பெரிதும் பாதிக்கப்படும்.
அதேசமயம் வறட்சி, அதிக வெப்பநிலை, ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பற்றாக்குறையால் மணிபிடிக்கும் திறன் குறைந்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இச்சூழலைக் கருத்தில் கொண்டு உணவு மற்றும் தீவனப்பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
மக்காச்சோளத்தில் குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெற்றிட TNAU மக்காச்சோள மேக்சிம் என்ற பூஸ்டரை பருவத்திற்கு தலா 3 கிலோ என்ற அளவில் ஆண் மஞ்சரி மற்றும் மணி பிடிக்கும் பருவங்களில் மொத்தமாக ஏக்கருக்கு 6 கிலோ வீதம் இலைவழியாகத் தெளிக்க வேண்டும். இத்தெளிப்பினால் மக்காச்சோளத்தில் மணிப்பிடிக்கும் திறன் அதிகரித்து 20 சதவீதம் மகசூல் கூடுகிறது.
TNAU கரும்பு பூஸ்டர்
கரும்பு பயிர் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வேளாண் தொழிற்துறைப் பயிராகும். நீண்டகாலப் பயிரான கரும்பு தன் வளர்ச்சி காலத்தில் அதிக அளவு சத்துக்களை மண்ணில் இருந்து எடுத்துக்கொள்கிறது.
அதேசமயம் வறட்சி, களர் மற்றும் உவர் நிலசாகுபடி, பயிர் சுழற்சி செய்யாமை போன்ற காரணங்களால் மண் வளம் குன்றி உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது.
எனவே, கரும்பு சாகுபடியில் சரியான மண் மற்றும் உர மேலாண்மையை பின்பற்றி அதேசமயம் TNAU கரும்பு பூஸ்டரை ஏக்கருக்கு 1,1.5,2 கிலோ என்ற அளவில் கரும்பு நட்ட 45, 60 மற்றும்75வது நாட்களில் இலைவழித் தெளிப்பாக தெளிப்பதன் மூலம் கரும்பில் இடைக்கணுக்களின் நீளம் கூடுவதினால் கரும்பின் வளர்ச்சி, எடை மற்றும் சர்க்கரையுன் அளவு அதிகரிக்கின்றது. இதன் மூலம் கரும்பு சாகுபடியில் அதிக இலாபம் பெற முடியும்.
மேற்கூறிய TNAU பயிர் பூஸ்டர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் வினையியல் துறையில் கிடைக்கும். விவசாயிகள் நேரடியாகவோ அல்லது பார்சல் சேவையை பயன்படுத்தியோ இப்பயிர் பூஸ்டர்களைப் பெற முடியும். இதற்கான முழு தகவல்களை http://sites.google.com/a/tnau.ac.in/crop-physiology/extension என்ற இணையதளத்தில் அறியலாம்,
மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் வினையியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003, தொலைபேசி எண்: 0422-6611243, மின்னஞ்சல் : physiology@tnau.ac.in.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு 60% மானியத்தில் மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஒதுக்கீடு!!
சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.6080 வரையில் உயர்வு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...